பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதில் பப்பாளி ஸ்ட்ரா!

Update: 2021-01-01 11:00 GMT

வைத்தீஸ்வரன் கோவில் அருகே இளநீர் கடைக்காரர் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதில் பப்பாளி ஸ்ட்ராவை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து அசத்தி வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்களில் செவ்வாய் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதுபோல வைத்தீஸ்வரன் கோவிலில் பார்க்கப்படும் நாடி ஜோதிடம் பிரபலமானது. கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தணிக்க 20க்கும் மேற்பட்டோர் கோவிலைச் சுற்றிலும் இளநீர் வியாபாரம் செய்து வருகின்றனர்.மக்கள் இளநீரை அருந்துவதற்கு ஏதுவாக அவர்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ராவை பயன்படுத்தி வந்தனர். தீமை பயக்கக்கூடிய பிளாஸ்டிக் ஸ்ட்ராவை பயன்படுத்த சமீபத்தில் பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்தது. இதனால் இளநீர் வியாபாரம் மந்தமானதால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி என்ன செய்வதென தவித்தனர்.

இதனையடுத்து வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்த இளநீர் விற்பனை செய்யும் செந்தில் சற்று வித்தியாசமாக யோசித்து நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் பப்பாளி இலை தண்டை ஸ்ட்ராவாக பயன்படுத்தி இளநீர் விற்பனை செய்துள்ளனர். இதற்கு பொதுமக்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் தொடர்ந்து பப்பாளி இலை தண்டை ஸ்ட்ராவாக பயன்படுத்தி இளநீர் வியாபாரத்தைச் செய்து அசத்தி வருகிறார்.

Tags: