புத்தாண்டையொட்டி பூம்புகார் கடற்கரையில் தடையை மீறி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தாண்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடற்கரை மற்றும் பொது இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் கடற்பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். பொது இடங்கள் கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். இருந்தும் காவிய நகரமாக போற்றப்படும் பூம்புகார் சுற்றுலா தளத்தில் இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து கட்டுப்பாடுகளையும் மீறி கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் அங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.