தொடரும் மழையால் குறுவை நெல்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை
மழை தொடர்ந்தால் வயலி்ல் சாய்ந்துள்ள பயிர்கள் முளைத்துவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்;
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் மழையால் வயலில் சாய்ந்த குறுவைநெல் பயிர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் மழையால் குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது தீவிரமாக அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக அவ்வப்பொழுது திடீரென இரவு நேரங்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. நேற்று இரவு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்தது.
வில்லியநல்லூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 200 ஏக்கரில் 25 ஏக்கருக்கு மேல் குறுவை பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் தாழஞ்சேரி, கொண்டல், திருவிழுந்தூர், கொற்க்கை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறுவை பயிர்கள் சாய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மழை பெய்தால் சாய்ந்த பயிர்கள் முளைத்துவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர் .