நாகர்கோவிலில் அமமுகவின் டிடிவி தினகரன் பங்கேற்ற விழாவில் மோதல் ஏற்பட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் டிடிவி தினகரனை வரவேற்பதற்காக பொதுக்கூட்ட மைதானத்திற்கு வெளியே பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு இடங்களைச் சேர்ந்த செண்டை மேள கலைஞர்களின் நிகழ்ச்சியும் இடம்பெற்றது அப்போது மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த செண்டை மேள குழுவினருக்கும் இரணியல் பகுதியைச் சேர்ந்த செண்டை மேள குழுவினருக்கும் இடையே செண்டை மேளம் இசைப்பதில் போட்டி ஏற்பட்டது.ஏற்கனவே இவர்களுக்கு இடையே முன்விரோதம் காணப்பட்ட நிலையில் இன்று போட்டி போட்டு செண்டைமேளம் இசைத்துக் கொண்டிருந்த போது திடீரென இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் கண், கால் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், இச்சம்பவத்தால் டிடிவி தினகரன் வரும் போது மேள கலைஞர்கள் மேளம் இசைக்காமல் புறக்கணித்தனர்.இதனிடையே நிகழ்ச்சி நடைபெறும் பகுதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்திருக்கும் சாலை என்பது தெரிந்தும் சாலையின் இரு புறங்களிலும் அமமுக வினர் வாகனங்களை நிறுத்தியதால் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.