அடையாளம் தெரியாத சடலம் - நல்லடக்கம் செய்த போலீசார்

Update: 2021-01-11 04:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை போலீசார் நல்லடக்கம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியில் வன சரகத்திற்கு உட்பட்ட குட்டி பொத்தை வன பகுதியில் கடந்த 25ம் தேதி மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்குவதாக கீரிப்பாறை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.இதனை அடுத்து கீரிப்பாறை போலீசார் மற்றும் தடிக்காரன்கோணம் கிராம நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர் யார் எந்த இடத்தை சார்ந்தவர் என்பது குறித்து கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடைபெற்றது. விசாரணையில் 15 நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் அவரது உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து போலீசார் எடுத்து வந்தனர்.தொடர்ந்து தடிக்காரன்கோணம் ஊராட்சிக்கு சொந்தமான மயானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிராங்கிளின், கிராம நிர்வாக அலுவலர் திரவியம், கீரிப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் போலீசார் நல்லடக்கம் செய்தனர்.

Tags: