இரண்டு பெண் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மனைவி சென்றதால் தீ குளிக்க முயன்ற கணவனால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திட்டுவிளை பகுதியை சேர்ந்த சுபமாலினி என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 23 ம் தேதி அன்று மாலினி தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின் அங்கிருந்து மாயமானார். இது குறித்து சுதாகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் சுபமாலினி சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் சந்தோஷிடம் இருந்து மீட்டனர். இந்நிலையில் மீண்டும் சுபமாலினி சந்தோஷ் உடன் சென்று விட்டாராம். அத்துடன் சுதாகரன் சேமித்து வைத்திருந்த 1 லட்சம் ரூபாயையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த சுதாகரன் தனது 2 பெண் குழந்தைகளையும் அழைத்து கொண்டு நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் வந்து தான் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.