சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவில் மார்கழி பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோவில்.சுமார் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள இக்கோவிலில் இந்து கடவுள்களின் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே கருவறையில் ஒரே விக்ரகத்தில் இருந்து அருள்பாலிப்பது தனி சிறப்பாக உள்ளது,கேரளா ஆகம விதிகளின் படி பூஜைகள் நடைபெறும் இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழா தேரோட்டம் சிறப்பு பெற்றது,அதன் படி இந்த வருடத்திற்கான மார்கழி பெரும் திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா, மக்கள் மார் சந்திப்பு, அலங்கரிக்கப்பட்ட வாகன பவனி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்ட இக்கோவிலின் திருதேரோட்டம் இன்று நடைபெற்றது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் கழக மாநில அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் திருதேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.விநாயகர் தேரை சிறுவர்களும், அம்மன் தேரை பெண்களும், சிவன் தேரை அனைத்து தரப்பினரும் அரோகரா, ஓம் நம சிவாய, ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்,நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் கோவில் சன்னதியை அடையும், விழாவில் முக கவசம் அணிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களின் பாதுகாப்பு கருதி சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மருத்துவர்கள் கொண்ட குழு பக்தர்களின் வெப்ப நிலையை பரிசோதித்து கிருமி நாசினி வழங்கி அதன் பின்னரே கோவிலுக்குள் நுழைய அனுமதித்தனர்.