கைலாச பர்வத வாகனத்தில் இறைவன் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Update: 2020-12-28 06:00 GMT

சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோவிலில் தாணுமாலய சுவாமியும், அம்பாளும் கைலாச பர்வத வாகனத்தில் எழுந்தருளினர்.

தென் தமிழகத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள தானுமாலயன் சுவாமி கோவில்.இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மார்கழி பெரும் திருவிழா சிறப்பு பெற்றது.இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா கடந்த 21 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவின் 7- ம் நாளான இன்று தாணுமாலய சுவாமியும், அம்பாளும் கைலாச பர்வத வாகனத்திலும், பெருமாள், விநாயகர், அறம்வளர்த்த நாயகி, முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசாமி, மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும் எழுந்தருளினர்.

மேள தாளங்கள் முழங்க எழுந்தருளிய சுவாமி வாகனம் நான்கு ரத வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.இக்காட்சியை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்து இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்து பக்தி பரவசமடைந்தனர்.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags: