கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தா ஆறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் சிவி சண்முகம் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தா ஆறு அணையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய பாசன நிலங்கள் 1243 ஏக்கர் மற்றும் புதிய பாசன நிலங்கள் 4250 ஏக்கர் என மொத்தம் 5493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் ஆன 36 அடியில் தற்போது 36.50 அடி நிரம்பியுள்ளதால் அடுத்த 47 நாட்களுக்கு பழைய பாசன ஆற்றில் வினாடிக்கு 15 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 60 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
முன்னதாக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை வகித்தார். சட்டம் மற்றும் நீதித்துறை சிறைத்துறை அமைச்சர் சி வி சண்முகம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து மலர் தூவி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்டச் செயலாளர் குமரகுரு ,கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, முன்னாள் அமைச்சர் மோகன், தமிழ்நாடு சர்க்கரை ஆலைகள் இணைய தலைவர் ராஜசேகர், கலந்து கொண்டனர்.அணையின் தற்போதைய இருப்பைக் கொண்டு தொண்ணூத்தி எட்டு நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாசன விவசாயிகள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக வருவாய் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.