நகைக்காக மூதாட்டி கொலை - வாலிபர் கைது
தருமபுரி:பென்னாகரம் அருகே ஒரு பவுன் தங்க நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.;
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஆனைக்கல்லானூர் பகுதியைச் சேர்ந்த மதிமுனியம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். தொடர்ந்து தனியாக இருந்த மூதாட்டிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த ராஜா, மூதாட்டி மதிமுனியம்மாள் காதில் அணிந்திருந்த தங்க நகையை கேட்டு தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மூதாட்டி நகை தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா, மூதாட்டியிடம் தகராறில் ஈடுபட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து மூதாட்டி காதில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க தோடை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து, வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். தொடர்ந்து பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மூதாட்டியை கொலை செய்துவிட்டு ஆனைக்கல்லானூர் பகுதியில் பதுங்கி இருந்த ராஜாவை பென்னாகரம் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.