குழந்தை வரம் அருளும் விரிஞ்சிபுரம் ஈசன்! நம்ம வேலூர் கிட்ட தாங்க

Virinjipuram Temple History in Tamil-ஒரு பெரிய லிங்கத்தின் மேல் 1008 சிவலிங்கம் அமைந்திருப்பது, லிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பது என பலவாறு சிறப்புகளை கொண்டுள்ள சிவத்தலம்

Update: 2022-10-09 05:24 GMT

Virinjipuram Temple History in Tamil-வேலுர் மாநகருக்கு மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் விரிஞ்சிபுரம் அமைந்துள்ளது. இது நாட்டின் மிகப் பழைய திருத்தலமாக அறியப்படுகிறது. சிவ ரகசியம், பிரம்மாண்ட புராணம், காஞ்சீ புராணம், காளத்தி மான்மியம், அருணகிரி புராணம் ஆகிய நூல்களில் இந்தத் திருத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய வரலாற்றின் உயர்விற்கு முற்கால சோழர்களின் ஆட்சியும், அவர்களது பல நினைவுச் சின்னங்களும் இன்றும் தமிழகத்தில், பல அடையாளங்களாக இருக்கின்றன. சோழர்காலத்து கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் இவர்கள் குறித்த சான்றுகளை கல்வெட்டுகளாக நாம் காண முடிகிறது. அப்படி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய கோவிலின் சிறப்பு குறித்து அறிந்துகொள்வோம்.

ஒரு பெரிய லிங்கத்தின் மேல் 1008 சிவலிங்கம் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். மூலவர் சுயம்பு லிங்கமாகவும் சற்று சாய்ந்த கோணத்திலும் காட்சியளிக்கிறார். சிவலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக கதைகளும் உண்டு. அதனை இப்பதிவின் பிற்பகுதியில் காண்போம். மேலும், இச்சிலைகளின் வடிவமைப்பும், கல்வெட்டுக் குறிப்புகளும் கோவிலின் உள்ளே சோழர்களால் மறைக்கப்பட்ட புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது.

விரிஞ்சிபுரத்தைக் குறித்து 18 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விஜய நகர மன்னர்கள், பல்லவ மன்னர், சோழ மன்னர், சம்புவராய மன்னர் உள்ளிட்டோர் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டது குறித்த குறிப்பு கல்வெட்டுகளில் உள்ளது. விரிஞ்சிபுரத்தின் சிறப்பையும் தொன்மையையும் இந்தக் கல்வெட்டுகள் விளக்குகின்றன.

மார்க்கபந்தீஸ்வரர் கோவில் சோழர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. இக்கோவிலின் வடக்கு கோபுர வாயில் வருடத்தின் அனைத்து நாட்களுமே திறந்த நிலையில் இருக்கும். இதன் வழியாகத்தான் தேவர்கள் அன்றாடம் வந்து இறைவனை வழிபடுவதாக ஐதீகம். இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். கோவிலின் ஒவ்வொரு சுவர்களிலும், தூண்களிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது.

திருவண்ணாமலையில் சிவபெருமானின் திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில் மனிதப் பிறவி எடுத்து மார்க்கபந்தீஸ்வரர் திருமுடியைத் தரிசித்தார். அவருக்காக சிவபெருமானே தலையை வளைத்து அருளிய பெருமை இத்தலத்திற்கு உண்டு.

கோவிலின் முதல் பிராகாரத்தில் தென் கிழக்காக அமைந்துள்ள இத்தலத்து சிம்ம தீர்த்த குளம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது ஒரு சிங்கத்தின் வாய் வழியாக நுழைந்து செல்லும் முறையில் நடபாவிக் கிணறாக அமைந்துள்ளது. குழந்தைகள் இன்றி தவிப்போர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வேண்டினால் குறிப்பிட்ட காலத்திலேயே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இவைத் தவிர சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் என வேறு இரு தீர்த்தக்குளங்களும் இங்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குனி பிரம்மோற்சவம் 10 நாட்கள் திருவிழா கொடி ஏற்றம் மற்றும் தீர்த்தவாரியுடன் நடக்கும். விழா நாட்களில் பத்து வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவார்.

கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு மிகவும் விசேஷம், அன்று ஒருநாள் மட்டுமே இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சிம்மகுளத்தில் புனித நீராடுவர்.

ஆடிப்புரம், சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை கோயிலின் மிக விசேஷமான நாட்கள் என்பதால் அந்த நாட்களில் பக்தர்கள் பெருமளவில் கூடுவர்.

பௌர்ணமி அன்னாபிஷேகம், பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, விசாகம், கார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தவிர வருடத்தின் மிக முக்கிய விசேஷ தினங்களான தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் கோயிலில் சுவாமிக்கு விஷேக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன. இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளது. இது ஒரு அதிசய பனைமரமாகும். இந்த ஒரு வருடம் பனைமரத்தில் காய்க்கும் பனங்காய்கள் கறுப்பாக இருக்கிறது. மறுவருடம் காய்க்கும் பனங்காய்கள் வெள்ளையாக இருக்கிறது. மூலவருக்கு மேல் ருத்ராட்சப் பந்தல் இருப்பது விசேஷம்.

திருவண்ணாமலையில் ஈசனின் முடி காண முடியாமல் ஈசனாரின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு ஈசனின் முடி கண்டதாக கூறினார். அதனால் அவதியுற்ற பிரம்மா, தேவரூபத்தில் காட்சி தரக்கூடாது என்று ஈசன் கருதியதால் விரிஞ்சிபுரத்தில் உள்ள இக்கோயில் குருக்கள் மகனாக பிறந்து சிவசர்மன் என்ற பெயரோடு வளர்ந்தார். கொஞ்ச காலத்தில் தந்தையார் மறைந்ததால் சிவசர்மன் சிவபெருமானுக்கு பூஜை செய்ய சிறுவன் தயாரானான்.சுவர்ண கணபதியை வணங்கிய பின் கையில் அபிஷேக குடத்துடன் பகவானுக்கு அபிஷேகம் செய்ய முயன்றபோது, ங்கம் உயரமாக இருந்ததால் பாலகன் சிவசர்மனுக்கு திருமுடி எட்டவில்லை. அது கண்டு எந்தையே எனக்கு எட்டவில்லையே நும்முடி என்று உருகி நிற்க, அவனது பக்திக்கு இரங்கி ஈசன் தன் திருமுடியை சாய்த்தார். ஈசனின் திருமுடி வளைந்து சிறுவன் முறைப்படி செய்த பூஜைகளை ஏற்றுக்கொண்டார்.

அதன் காரணமாக இன்றும் முடி சாய்ந்த மகா லிங்கமாக மார்க்கபந்தீசுவரராக காட்சி அளிக்கிறார் என்று கோவில் வரலாறு கூறுகிறது.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இக்கோவில் திருக்குளத்தில் நீராடி கோயிலில் உறங்குகிறார்கள். அவர்கள் கனவில் பெருமான் காட்சி தந்தால் அடுத்த வருடமே கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, முதலில் பாலாற்றில் குளித்துவிட்டு, பின்னர் பிரம்ம தீர்த்தத்திலும் சிம்ம குளத்திலும் குளித்து விட்டு சுவாமியை வளம் வந்தால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News