திருப்பதியில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவ விழா
செப்டம்பர் 18 முதல் 26 வரை சலகட்லா பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் வழக்கம்போல அக்டோபர் மாதம் 15 முதல் 23 வரை நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சலகட்லா பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதேபோல் நவராத்திரி பிரம்மோற்சவம் வழக்கம்போல அக்டோபர் மாதம் 15 முதல் 23 வரை நடைபெற உள்ளது.
இரண்டு பிரம்மோற்சவங்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம் நடைபெறும். இந்த கொடியேற்றம் என்பது சாமியின் வாகனமான கருடன் உருவம் கொண்ட கொடியேற்றம் ஆகும். கொடிமரத்தை அடைந்த கருடன், மலையிலுள்ள அனைத்து தெய்வங்களையும் தன் குருவின் பிரம்மோற்சவத்திற்கு வருமாறு அழைப்பார்.
ஆனால் சலகட்லா பிரம்மோற்சவங்களில் இந்தக் கொடியேற்றம் நடைபெறுவதில்லை. முதல் நாள் கொடியேற்றத்திற்கு பதிலாக தங்க ரதத்தில் சாமி வலம் வருகிறார்.
மேலும் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் மாலையில் புஷ்ப விமானத்திற்கு பதிலாக தங்க ரதத்தில் ஊர்வலம் நடக்கும். 8-ம் நாள் காலை தங்க தேர் திருவிழாவிற்கு பதிலாக சாதாரண தேரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இப்படி சில வித்தியாசங்களைத் தவிர சலகட்லா பிரம்மோற்சவத்திற்கும், சாதாரண பிரம்மோற்சவத்திக்கும் எந்த வித்தியாசம் இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் இதேபோல் இரண்டு பிரம்மோற்சவங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.