இன்று ஸ்ரீ வராஹ ஜெயந்தி - தொழில் சிறக்க வராகமூர்த்தியை வணங்கலாம்
மகா விஷ்ணு பக்தர்களை காக்கும் பொருட்டு 10 அவதாரங்கள் எடுத்தார்.அந்த வரிசையில் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம்;
ஸ்ரீ வராஹ ஜெயந்தி :வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் (பன்றி)
மனிதன் குழந்தையாகப் பிறந்து ஆறாவது மாதம் கழித்து கால்களை மடக்கி, முட்டிப் போட்டு பன்றிக் குட்டிகளைப் போல எழ ஆரம்பிக்கும் பருவம் அது. அதனால் அந்த பருவம் வராக அவதாரத்தோடு தொடர்பு படுத்தப்படுகிறது.
காக்கும் கடவுளான மகா விஷ்ணு பக்தர்களைக் காக்கும் பொருட்டு 10 அவதாரங்கள் எடுத்தார்.இந்த வரிசையில் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராகம் அவதாரம் (பன்றி). பூமியைக் கைப்பற்றிய இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரன் அதை ஒரு கடலுகடியில் எடுத்துச் சென்றான். பூமியைக் காக்கும் பொருட்டு, கடலிலிருந்து மீட்க வராக அவதாரம் எடுத்தார். பூமியை மீட்பதைத் தடுக்க வந்த இரண்யாட்சனனுடன் ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வராக மூர்த்தி வென்றார் என்பது ஐதீகம்.
பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து உலகங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவன். அவன் ஒரு சமயம் மகாவிஷ்ணுவுக்கு எவ்வளவு வலிமை உள்ளதென்று அறிய வைகுண்டம் சென்றான். அங்கே அவன் கண்களுக்கு பகவான் தென்படவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்தான். அப்போது ஓரிடத்தில் பூமாதேவி தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். அவன் கண்களுக்கு உருண்டை வடிவத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதுபோல் தெரிந்தது. உற்றுப் பார்த்தான். அவள் அழகாக இருப்பதைக் கண்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவளைத் தூக்கிக் கொண்டு பாதாள உலகம் விரைந்தான்.
"பகவானே, என்னைக் காப்பாற்றுங்கள்" என்று பூமாதேவி அபயக்குரல் கொடுத்தாள். அந்தக் குரல் மகாவிஷ்ணுவின் காதில் விழுந்தது. பூமாதேவி எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை வதம்செய்து, பூமியைத் தன் கோரைப் பற்களால் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். வராகராய்க் காட்சிதந்த மகாவிஷ்ணுவை பூமாதேவி அன்புடன் பார்த்து ஆரத்தழுவினார். அதனால் மகிழ்ந்த வராகர் அவளைத் தானும் தழுவினார். இவ்வாறு அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்ட காலம் 'தேவவருஷம்' என்கிறது புராணம். இருந்தாலும் அது அந்தி நேரம். அதன் விøளாக ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பவுமன். இவனே பிற்காலத்தில் நரகாசுரன் ஆனான் என்கிறது புராணம்.
வராகப்பெருமாளுக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. வைணவத் திருத்தலங்களில் தனிச்சன்னிதியும் உண்டு.
பொதுவாக, வராக மூர்த்தியை வைணவத் திருக்கோயில்களில் தனிச்சன்னிதியிலோ, சித்திர வடிவிலோ தரிசிக்கலாம். அந்த வகையில் நூற்றெட்டு வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் கோயிலில், தசாவதாரச் சன்னிதியில் தனித்து நிற்கும் வராகரை தரிசிக்கலாம். இதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலின் வடக்குப்புறம் ஓடும் கொள்ளிடக்கரைக்கு அருகில் அமைந்துள்ள தசாவதாரக் கோயிலில் வராகர் சுமார் ஆறடி உயரத்தில் காட்சி தருவதை தரிசிக்கலாம்.
வராகமூர்த்தியை வழிபட்டால் பூமி சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல பலன்களை அடைவர். மேலும், சனிதசை, சனி தோஷ சங்கடங்களிலிருந்து விடுபட்டு சுகம் காணலாம். திருமணத்தடைகளை நீக்கும் வல்லமைப் படைத்தவர் வராகர். இவரை தம்பதி சமேதராக வழிபட வாழ்வில் என்றும் சுகம் காணலாம் என்பது நம்பிக்கை.
லட்சுமி வராஹர் காயத்திரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸந்தாநபுத்ராய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்