ரம்பாதிரிதியை பெண்களுக்கு அழகும் செல்வமும் அருளும் நன்னாள் இன்று

சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை’;

Update: 2021-06-13 12:47 GMT

ரம்பா திரிதியை பெண்களுக்கு அழகும் செல்வமும் அருளும் நன்னாள் இன்று!

சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை 'அட்சய திரிதியை'. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே 'ரம்பாதிரிதியை.' வைகாசி மாத வளர்பிறை திரிதியையே ஒவ்வோர் ஆண்டும் ரம்பாதிரிதியையாகக் கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் ஆனி மாதத்திலும் இந்த நாள் வருவதுண்டு.இந்த ஆண்டு வைகாசி 30, ஜூன் (13.6.2021) ரம்பா திரிதியை கொண்டாடப்படுகிறது.

இந்தத் திரிதியையன்றுதான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப்பெற்றாள் என்கின்றன சாஸ்திரங்கள்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து தோன்றியவர் களே தேவ கன்னியர்களான அப்சரஸ்கள். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, உருப்பசி என்று மொத்தம் 60,000 அப்சரஸ்கள் தேவலோகத்தில் உள்ளனர் என்கின்றன புராணங்கள். அப்சரஸ்கள் பொதுவாக சிவ பூஜை செய்தல், யாழ் மீட்டுதல், நடனம் ஆடுதல் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களாவர். இவர்கள் அனைவருக்கும் தலைவி ரம்பைதான். அழகில் தலைசிறந்தவள். நடனத்தில் கை தேர்ந்தவள். யாழ் மீட்டி உலகையே தன் அசைவில் வைக்கும் வல்லமை நிறைந்தவள்.

ஒருமுறை தேவசபையில் இந்திரன் மற்றும் இந்திராணிக்கு முன்பாக அப்சரஸ்களுக்குள் நடனப்போட்டி நடந்தது. வழக்கமாக போட்டியில் ரம்பைதான் தன் நளினமான நடை மற்றும் யாழ் இசையால் அனைவரையும் மயக்கி வெற்றிபெறுவாள். ஒவ்வொரு முறையும் இதேபோன்ற போட்டியில் வெற்றி பெறுவதன்மூலமே அவள் 'தேவலோகப் பேரழகி' எனும் பட்டத்தைத் தன்வசம் தக்கவைத்திருந்தாள்.

ஆனால், அன்று அரங்கேறிய நடனத்தில் ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவருக்கும் கடுமையான போட்டி நிலவியது. நேரம் செல்லச் செல்ல மூவரின் நடன வேகமும் அதிகரித்தது. 'எங்கே தன் பட்டம் கைவிட்டுப் போய்விடுமோ' என்ற பதற்றத்தில் அந்த அரங்கமே அதிரும்படி நாட்டியமாடினாள் ரம்பை. அவளது நடனத்தில் நளினம் குறைந்து ஆக்ரோஷம் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது அவளது நெற்றிச் சுட்டியும் பிறைச்சந்திர னும் கீழே விழுந்தன. நிலைகுலைந்த ரம்பை போட்டியைவிட்டு வெளியேறினாள். அவளைப் பார்த்து எல்லோரும் நகைத்தார்கள்.

பயிற்சியையும் இறை வழிபாட்டையும் தவறாமல் மேற்கொள்ளும் தனக்கு இந்த அவமானம் எதற்காக ஏற்பட்டது என்று இந்திரனிடம் கேட்டாள் ரம்பை. இந்திரனோ, "நளினமாக ஆட வேண்டிய நடனத்தை ஆக்ரோஷமாக ஆடியதால், கலைவாணியே உன் நடனத்தைக் காண சகிக்காமல் பிறைச் சந்திரனையும் நெற்றிச் சுட்டியையும் விழவைத்துவிட்டாள். உன் அழகு இனி மங்கத்தொடங்கிவிடும். இனி உன்னால் அப்சரஸ்களுள் தலைசிறந்தவளாக இருக்க முடியாது" என்று தெரிவித்தான்.

தனது தவற்றை உணர்ந்த ரம்பை, இழந்த தேவலோகப் பேரழகி எனும் பட்டத்தையும் புகழையும் மீண்டும் பெற வேண்டும் என்று நினைத்து இந்திரனிடம் பரிகாரம் வேண்டினாள். அப்போது, அவளுக்கு வைகாசி சுக்லபட்ச திரிதியையின் மகத்துவத்தை எடுத்துக்கூறி, அன்றைய தினத்தில் விரதமிருந்து பூலோகத்தில் மகிழ மரத்தடியில் அருள்புரியும் கௌரிதேவியை வழிபட வேண்டும் என்று தெரிவித்தான் இந்திரன். அதன்படி ரம்பையும் கௌரிதேவியைத் தரிசிக்கப் பூலோகத்துக்கு வந்தாள்.

அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை தினத்தில் அம்பிகையை ஒரு கலசத்தில் ஆவாஹனம் செய்து விரதமிருந்து பூஜை செய்தாள். அந்தப் பூஜையின் பலனாக கௌரிதேவி, மறுநாள் திரிதியை தினத்தில் அழகின் சொரூபமாக, முருகனைத் தன் மடியில் வைத்துக்கொண்டு காத்யாயினி ரூபம்கொண்டு தரிசனம் கொடுத்தாள். அவளது விரதத்தை ஏற்று மீண்டும் அவளது அழகும் செல்வமும் பெருக வரம் அளித்தாள் அம்பிகை. ரம்பை மீண்டும் தேவலோகத்தின் பேரழகியானாள்.

ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற அந்த நன்னாளே ரம்பாதிரிதியை. இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும், செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.

அத்தகைய புண்ணிய பலன் தரும் ரம்பா திரிதியை இன்று வருகிறது. பெண்கள் விரதமிருந்து இன்று கௌரிதேவியை வழிபடலாம். வீட்டில் காத்யாயனியின் யந்திரத்தையோ அல்லது திருவுருவப் படத்தையோ பூஜையறையில் வைத்து பூஜை செய்யலாம். அப்போது, அம்பிகை யின் பாடல்களைப் பாடி வாழைப்பழங்க ளை நிவேதனம் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வாழைப்ப ழங்களைக் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும்.

இதே விரதத்தை, கௌரியம்மன் கோயிலுக்குச் சென்றும் மேற்கொள்ளலாம். ரம்பாதிரிதியைக்கு பெண்கள் மட்டும்தான் தனியாக விரதமிருக்க வேண்டும் என்பதில்லை. கணவனுடனும் சேர்ந்து விரதமிருக்க அழகு, செல்வம், நீண்ட ஆயுள், குழந்தைகள், வீடு ஆகிய வளங்களை அடைவார்கள் என்கிறது பவிஷ்ய புராணம்.

வட இந்தியாவில் இந்த ரம்பை திரிதியை வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும். தமிழகத்தில், ரம்பை வழிபட்டதாகக் கருதப்படும் திருமுறைக்காடு திருத்தலத்திலும் அப்சரஸ்கள் வழிபட்டதாகக் கருதப்படும் திருப்பைஞ்ஞீலி திருத்தலத்துக்கும் சென்று வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது.

Tags:    

Similar News