வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர்
விநாயகரின் உடலில் மிளகை அரைத்து தேய்த்து, குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து, அந்த புனித தண்ணீரை கால்வாய்க்குள் விழும்படி செய்தால் தண்ணீர் செழிக்கும் என்பது ஐதீகம்;
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் திருக்கோவில். கன்னடியன் கால்வாயின் கரையில் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலில் உள்ள விநாயகரின் உடலில் மிளகை அரைத்து தேய்த்து, குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து, அந்த புனித தண்ணீரை கால்வாய்க்குள் விழும்படி செய்தால், மழை பொழிந்து தண்ணீர் செழிக்கும் என்பது ஐதீகம். எனவே மழை பொய்த்து போகும் காலத்தில் இந்த விநாயகருக்கு மிளகு அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்யும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.1916ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தமிழக அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் இந்த மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள மன்னன் ஒருவன் தீராத வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். இதை அறிந்த கர்நாடக இளைஞன் ஒருவன் மன்னர் உயரமுள்ள மாணிக்க கற்கள் நிறைந்த சிலையை மன்னரிடம் பெற்றுக்கொண்டான்.
சிலை கைமாறியதும் உயிர்பெற்றது. வியாதி உன்னை அண்டாமலிருக்க காயத்ரி மந்திரத்தால் கிட்டிய பலனின் ஒரு பகுதியை எனக்கு தானம் செய் என்று கேட்டது. பிரம்மச்சாரியும் கொடுத்துவிட்டான். தர்மத்துக்கு மாறாக காயத்ரியின் பலனை தானம் செய்துவிட்டோமே என கலங்கினான். இதற்குப் பிராயச்சித்தம் செய்ய எண்ணி பொதிகையில் வசித்து வந்த குறுமுனி அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவு செய்தான். பல தடைகளுக்குப் பின் அகத்தியரை சந்தித்த போது அவன் கேட்டதை தருவதாகச் சொன்னார் அகத்தியர். இளைஞன் விஷயத்தைச் சொன்னான்.
அகத்தியர் அவனிடம் தண்ணீர் தானமே தலை சிறந்தது. ஆகையால் மலையில் இருந்து கீழே இறங்கிச் செல்லும்போது வழியில் ஒரு பசுவைக் காண்பாய் அதன் வாலை பிடித்துக்கொண்டே செல் அது போகும் வழியை கால்வாயாக வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு அமைத்து அது கோமியம் பெய்யும் இடங்களில் ஏரியும் தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு என்றார்.
அகத்தியர் சொன்னது போலவே அனைத்தையும் செய்தான்.அந்த இளைஞன். அவன் பசுவைக் கண்ட இடம் தான் சேரன்மகாதேவி. கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியைத் தோண்டினான். இப்போதும் கடல்போல் பரந்து கிடக்கிறது அந்த ஏரி. தான் வெட்டிய கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டும் என்பதற்காக விநாயகரை பிரதிஷ்டை செய்து அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து அபிஷேகம் செய்து அந்தப் புனித நீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தான் அப்படிப்பட்ட அந்த இளைஞனின் பெயர் இன்று வரை தெரியவில்லை.
ஒரே தேசத்துக்குள் கருத்து வேறுபாடு ஆனால் கர்நாடகாவிலிருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன் மலையாள மன்னரிடம் உதவிபெற்று தமிழ் நாட்டில் கால்வாய் தோண்டி கொடுத்திருக்கிறான். இதனால் இந்தக் கால்வாய்க்கே கன்னடியான் கால்வாய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கால்வாய் வெட்டியதோடு மட்டுமல்ல இதில் எத்தனை ஆண்டுகளானுலும் தண்ணீர் வரவேண்டுமென்பதற்காக வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர் கோவில் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறான். அவன் கட்டிய மிளகு பிள்ளையார் கோவில் திரு நெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ளது.
சேரன்மகாதேவி பகுதி விவசாயச் சங்கத்தினர் மழை இல்லாத காலங்களில் இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து அபிஷேகம் செய்து அந்த புனித நீர் கால்வாயில் விழும்படி செய்து வழிபாடு செய்கின்றனர்.