கிறிஸ்தவர்களின் தவக்காலம் நிறைவு
கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான ஈஸ்டர் பெருநாளுடன், தவக்காலம் நிறைவு பெற்றது.;
கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்து, மனிதனாக மண்ணில் அவதரித்து, மூன்றரை ஆண்டுகள் பல்வேறு அற்புதங்களை செய்து, பின் சிலுவையில் அறையுண்டு இறந்தார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அவர், மூன்றாம் நாள், சாவை வென்று, உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறுவது தான், 'ஈஸ்டர்' பெருநாள். இவ்விழாவையொட்டி, 46 நாட்கள், தவக்காலம் அனுசரித்த கிறிஸ்தவர்கள், நேற்று, ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடினர்.
கத்தோலிக்க திருச்சபையின், கோவை மறை மாவட்ட குரு ஜோசப் பிரகாசம் கூறியதாவது: ஆண்டவர் ஏசு, மனிதன் மீதுள்ள அன்பால், அவனை பாவத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக, கடவுள் என்ற தன்மையில் இருந்து இறங்கி, மண்ணில் மனிதனாக அவதரித்தார்; மக்களை நல்வழிப்படுத்தினார். பல அதிசய, அற்புதங்களை செய்தார் என, 'பைபிள்' சொல்கிறது. கிறிஸ்தவத்தை பொருத்தவரை, இந்த உலகில் வாழ்பவர்கள், இறந்து போனால், அதோடு அவர்களது வாழ்வு முடிந்து விடுவதாக அர்த்தம் இல்லை. மாறாக, அவர்கள் ஏசுவால், உயிர்ப்பெற்று எழுவார்கள்;
நல்லவர்களாக வாழ்ந்து மரிக்கும் போது, ஏசுவோடு, விண்ணக ராஜ்ஜியத்தில் இருப்பார்கள். இது, உலக வாழ்க்கை போன்று, அல்லாமல், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்பதுதான் கிறிஸ்துவத்தின் தத்துவம். எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், நல்லவர்களாக வாழ்ந்து இறக்கும் போது, இறைவனின் ராஜ்ஜியத்தில் இடம் கிடைக்கும்.
எனவே, பாவ நாட்டங்கள், உலக ஆசாபாசங்களை துறந்து, ஏசுவின் போதனைப்படி நடக்க வேண்டும் என்பதை ஈஸ்டர் பெருநாள் உணர்த்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
கற்று கொடுத்துது என்ன?
அவிநாசி, புனித தோமையார் தேவாலய இறை வழிபாட்டுக்குழுவை சேர்ந்த விவேக் டேனியல் கூறியதாவது: ஏசு, தம் தந்தையாகிய கடவுளுக்கு கீழ் படிந்து, சிலுவை சாவை ஏற்றுக் கொண்டார் என, பைபிள் சொல்கிறது. ஆக, பெற்றோர், மூத்தோருக்கு கீழ்படிதல் என்ற பண்பை புனித வெள்ளி கற்பிக்கிறது. பிறரின் துக்கத்தில் பங்கெடுக்காமல், தான் தப்பிக்க பிறரை காட்டிக் கொடுப்பது; ஆணவ போக்கு, இனம், மொழி, மத பேதம் பார்ப்பது; போலி அன்பால் பிறர் வாழ்வை கெடுப்பது; குற்றமற்றவர்களை பழித்துரைத்து, அவர்களின் மனதை காயப்படுத்துவது; பிறரை குறை சொல்லி, அவர்களின் வளர்ச்சியை தடுப்பது போன்ற குணங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதை புனித வெள்ளி உணர்த்துகிறது.
வாழ்க்கையில் தினசரி சந்திக்கும் தடைகள், துன்பங்களை எதிர்கொண்டு, வெற்றி கொள்ள வேண்டும். அநீதியை கண்டு கொள்ளாமல் தவிர்க்கும் மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தையும் கற்பிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.