வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்
வடலூரில் நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
உலகில் உள்ள மக்கள் அனைவரும் சமம். எல்லோரும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தி ஞானியாக விளங்கியவர் வள்ளலார் ஆவார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறான் என்றும், மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உணக்குள்ளே இருக்கும் ஜோதியை காண வேண்டும் என்பதை உணர்த்திய வல்லளாரின் ஜோதி தரிசன விழா நடைபெற்றது.
வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இவர் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது.
153-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணியளவில் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. காலை 7.30 மணியளவில் தருமசாலை அருகே சன்மார்க்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, மருதூரில் வள்ளலார் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், காலை 10 மணியளவில் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முதல் ஜோதி தரிசனப் பெருவிழா வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஜோதி வடிவத்தில் காட்சி அளித்த வள்ளலாரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருள்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
தொடா்ந்து, காலை 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
ஜோதி தரிசனத்திற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்துள்ளனர்.
விழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல்துறையினர் 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஞானசபை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.