வாலாஜாபாத் அருகே பழையசீவரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ வரதராஜ பெருமாள்

வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பகுதியில் மாட்டுப்பொங்கலையொட்டி பார்வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-16 13:48 GMT

பழையசீவரம் மலையில் இருந்து பார்வேட்டை நிகழ்ச்சிக்காக இறங்கி வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள்.

வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. பார்வேட்டை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம்.


அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

பழைய சீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள், நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாலை வெயில் வரதராஜ பெருமாள் மீது படும்படி மலையில் இருந்து ஒய்யாரமாக இறக்கப்பட்டார்.

மலையிலிருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்ல இரண்டு பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்து காட்சி அளித்தனர்.

ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழையசீவரம் பார்வேட்டை உற்சவத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

அதனை தொடர்ந்து நாதஸ்வரம், மேள வாத்தியம் முழங்க, அப்பகுதி பாலாற்றின் வழியாக திருமுக்கூடலில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலை வந்தடைந்தார்.

அங்கு, சாலவாக்கம், சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட, ஐந்து சுவாமிகளும், தங்களுக்கான தனித்தனி மண்டபங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நிறைவாக, ஐந்து சுவாமிகளும், இரவு, 7 மணிக்கு, திருமுக்கூடல் வழியாக அந்தந்த பகுதி கோவில்களுக்கு ஊர்வலமாக சென்றடைந்தனர்.

Tags:    

Similar News