அன்னதோஷம் தீர ஐப்பசி மாத அன்னாபிஷேகம்: காணத் தவறாதீங்க
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்;
உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி அன்று எல்லா சிவாலயங்களிலும் `அன்னாபிஷேகம்' கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு உணவுஅளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
`அன்னம் பர பிரம்மம்' என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி `அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. `எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்' என்பதே இதன் பொருள்.
தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 16 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிட்சமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல.
ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம்கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
வடித்து சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் நடைபெறும்.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கரைப்பார்கள். நீர் வாழ் உயிர்களுக்கு உணவு. நல்ல அதிர்வுகளும் உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் மேல் பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.
'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே அன்னத்தின் வடிவில் இருக்கிறான். அவனே நமக்குப் படியளப்பவன். எனவே இறைவனுக்கு அன்னாபிஷேகம் என்பது நாம் அவனுக்குச் செலுத்தும் நன்றிக்கடன்.
வரும் நவம்பர் 7ம் தேதியன்று அன்னாபிஷேகம் நடைபெறும், அதில் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெறுங்கள்.