மறுபிறவி இல்லை என்றால்தான்கும்பகோணத்தில் இந்த ஈசனைத் தரிசிக்க முடியும்

பிறவியில்லா பேரின்ப நிலையை அடைய கும்பகோணம் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூர் என்னும் தலத்தில் உறையும் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார்.;

Update: 2021-07-19 14:22 GMT

கும்பகோணம் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூர் தலம் 

இந்த உலகில் பிறந்த ஜீவ ராசிகள் அனைத்தும் தம் தம் பாவ புண்ணிய கணக்கின்படி,பிறவிகள் எடுத்து வருகின்றன. மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து என்று உழலும் இந்த வாழ்க்கை சக்கரம், என்று நிற்கும் என்பதை எவரும் அறிய முடியாது. நாம் எல்லோரும் வேண்டுவது, பிறவாத நிலையை தான். அத்தகைய பிறவியில்லா பேரின்ப நிலையை கும்பகோணம் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூர் என்னும் தலத்தில் உறையும் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்பது இத்தல சிறப்பாக சொல்லப்படுகிறது.மேலும் மறுபிறவி வாய்க்கப்பெற்றவர்கள் இத்தலத்து ஈசனை வணங்க முடியாது என்பது ஐதீகம்.


தனிச் சந்நிதியில் அருள்புரியும் வேதாந்த நாயகி அம்பாள் தனது வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு, அம்பாள் உதடுகள் குவிந்த நிலையில் இருப்பது அறிய காட்சியாகும். வேதாந்த நாயகி அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

ஒரு சமயம் சனி பகவான், இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், "நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னார். இதனால் கோபமடைந்த அம்பாள்,ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

அங்கு வந்த சனி பகவான், அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்று விட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

"என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். சனி பகவான், "நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்ததல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்'' என்று கூறினார். சனியின் ஆணவத்தை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, "ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன்.ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். மனமிரங்கிய ஈசனும்,சனியின் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இந்த தலத்து சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் .


சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் ஈசனை பிடித்துக் கொண்டது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும் என நாரதர் கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர் லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார். "பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும் தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார். பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்தில்,காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார் என்கிறது புராணம்.

பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் ஈசனின் திருமேனியை ,இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகள் கொண்ட கவசம் அலங்கரிக்கிறது. ருத்ராட்ச கவசம் அணிந்த ஈசனை இந்த தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.

இதற்குப் பின்னணியில் உள்ள புராண கதையை தெரிந்துக்கொள்ளலாம்.

அகத்திய மாமுனிவர் இத்தல இறைவனின் மகிமையை அறிந்து ஸ்ரீ விசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணிய சிவபெருமான், மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷியும் ,மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார்.

கோபமடைந்த அகத்தியர், "பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

அகத்தியரும் உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்றார். மகரிஷியும் ஐம்பது வருடங்கள் தினம் ஒரு பூ என்று வித விதமாக பூஜை செய்தார்.

ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலிக்க,மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்து, சாப விமோசனம்அருளினார்.அதனால் தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இக்கோவிலில் ,பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் வழங்கப்படுகிறது. பிறாவப் பெரும் புண்ணியம் அடைய எம் பெருமான் விஸ்வநாத சாமியை வணங்கி பணிவோம்.


Tags:    

Similar News