சபரிமலையில் மகர விளக்கு பூஜை நிறைவு.. கோயில் நடை மூடல்...

மகர விளக்கு பூஜை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று காலை அடைக்கப்பட்டது.

Update: 2023-01-20 05:42 GMT

மகர விளக்கு பூஜை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று காலை அடைக்கப்பட்டது.

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மலையாள மாதத்தில் முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காகவும் நடைதிறக்கப்படும்.

அதன்படி, 2022-23 ஆம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் காலக்கட்டத்தில் தமிழகம், கேரளம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தம் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்த நிலையில், மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அன்று புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை, ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெற்றது.

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முன்தினம் வரை நெய் அபிஷேகம் நடைபெற்றது.நேற்று இரவு மாளிகைபுரத்தம்மன் கோயிலில் குருதி பூஜை சடங்குகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலையுடன் மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு பெற்றது.


இதனையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 ஆம் படி வழியாக திரு ஆபரணப் பெட்டிகள் சன்னிதானத்தின் கீழ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் காலை 7 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. திரு ஆபரணப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது.

மகர விளக்கு பூஜை நிறைவு அடைந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17 ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News