சபரிமலையில் ஐயப்பனுக்கு 450 சவரன் தங்க அங்கி அணிவிப்பு.. நாளை மண்டல பூஜை…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு, ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள மாதத்தில் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். மேலும், மண்டல பூஜைக்காக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தினமும் நடை திறக்கப்படுவது உண்டு.
அதன்படி, சபரிமலையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நீளும் மண்டல காலம் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கியது.
கடந்த இரு வருடங்களாக கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் இந்த வருடம் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. கடந்த மாதம் சராசரியாக தினமும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து சென்றுள்ளனர்.
மேலும், டிசம்பர் மாதம் அதிகரித்து தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை(டிசம்பர் 27 ஆம் தேதி) நடைபெறுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இதற்காக, 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் இந்த தங்க அங்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம், கடந்த 23 ஆம் தேதி காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. ஓமல்லூர்,ரான்னி, பெருநாடு வழியாக இன்று மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடைந்தது.
பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.25 மணி அளவில் சன்னிதானத்தை வந்தடைந்தது. தொடர்ந்து, ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தங்க அங்கியுடன் காட்சியளிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதையடுத்து சபரிமலையில் நாளை மதியம் 12.30 மணி முதல் 1 மணிக்கு இடையே சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜையை காண திரளான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இன்று சபரிமலையில் சுவாமி தரினம் செய்தனர்.