சபரிமலை பங்குனி உத்திர திருவிழா: இன்று நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக இன்று மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வருகிற 25ம் தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

Update: 2024-03-13 04:22 GMT

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு (கோப்பு படம்)

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை 14ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று 13ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வழக்கமான பூஜைகளுக்குப் பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு இரவில் நடை சாத்தப்படும்.

பின்பு மறுநாள் 14ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதிஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24ம் தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25ம் தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது.

அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை 14ம் தேதி முதல் வருகிற 25ம் தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

Tags:    

Similar News