சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

Ayyappan Kovil Temple -ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது; வரும் 22ம் தேதி வரை, ஐயப்ப சுவாமியை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.;

Update: 2022-10-17 01:06 GMT

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; வரும் 22ம் தேதி வரை சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

Ayyappan Kovil Temple -கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மரக விளக்கு தரிசனம் சிறப்பு வாய்ந்தது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1ம் தேதி, பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். 

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக, வரும் நவம்பர் 17ம் தேதி நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்தில் தான் தொடர்ந்து 41 நாட்கள் நடை திறந்திருக்கும்.

மகர விளக்கு காலத்தில், தொடர்ந்து 20 நாட்கள் நடை திறந்திருக்கும். பிரசித்தி பெற்ற இந்த 2 பூஜை காலங்களில் தான் சபரிமலையில் பக்தர்கள் குவிவது வழக்கம். அப்போது சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வார்கள்.

பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே சபரிமலையில் தரிசனத்திற்கு, 'ஆன்லைன்' முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. ஆனாலும் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள்தான் மிக அதிகம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல், பக்தர்களுக்கு சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சபரிமலை ஐயப்ப சவாமி தரிசனத்திற்கு, 'ஆன்லைன்' முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி, முக கவசம் உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மண்டல, மகரவிளக்கு சீசன் சமயங்களிலும், மாத பூஜைகளின் போதும் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்தது.

கடந்தமுறை நடந்த தேவசம்போர்டு ஆலோசனை கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலையில் அமல்படுத்தப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகளை இந்த ஆண்டு நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தரிசனத்திற்கு தினசரி எண்ணிக்கை கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. எத்தனை பக்தர்கள் வேண்டுமானாலும், சுவாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக நிலக்கல் உட்பட 12 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்த, அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இன்று நடை திறப்பு

இந்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை செய்கிறார். நாளை, 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வழக்கம் போல், 'ஆன்லைன்' முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல் நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

கேரள அரசின் உத்தரவை தொடர்ந்து பக்தர்கள் முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News