ஏப்ரல் மாதம் 10 ம் தேதி ஸ்ரீ ராம நவமி நாளின்று!
ராமபிரான் அவதரித்த நாளே 'ராமநவமி' கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராமநவமி இன்றைய தினம் அனுஷ்டிக்கப் படுகிறது
ராமபிரான் அவதரித்த நாளே 'ராமநவமி' கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராமநவமி இன்றைய தினம் அனுஷ்டிக்கப் படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களைப் பின்பற்ற அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராமர் காட்டிய வழியைப் பின்பற்றி, சிறந்த தேசத்தைக் கட்டமைக்க உறுதி ஏற்போம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாளில் அனேக இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா கல்யாண மகா உற்சவ விழா போன்று அரங்கேறும். பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர்.
ராம நவமி 2022 முகூர்த்தம்
ராம நவமி: காலை 11:07 முதல் மதியம் 01:40 வரை
ராம நவமி காலம்: 02 மணி 32 நிமிடங்கள்
நவமி திதி தொடங்கம் - ஏப்ரல் 10, 2022 அன்று பிற்பகல் 01:23
நவமி திதி முடிவு - ஏப்ரல் 11, 2022 அன்று பிற்பகல் 03:15
ராம நவமி 2022 விரதம் இருக்கும் முறை
ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.
இன்றைய தினம் ராமர் கோயில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.