ரம்ஜான் நோன்பு கஞ்சி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
இந்த புனிதமான மாதத்தில், சூரியன் உதிப்பதற்கு முன்பாக 'ஸஹர்' எனப்படும் ஒரு எளிய உணவுடன் நோன்பைத் தொடங்குகிறார்கள் பக்தர்கள். உடலுக்கும் உள்ளத்திற்கும் வலு சேர்க்கும் இந்த எளிய உணவுக்குப் பின், அஸ்தமனம் வரை எந்த உணவோ பானமோ உட்கொள்வது இல்லை.;
ரமலான் மாதம். அது நோன்பின் மாதம்; தியாகத்தின் மாதம். உடலால் மட்டுமல்ல, மனதாலும் ஒரு பக்குவத்தை அடையும் பயிற்சிக்காலம். பசி என்பது ஒரு வெறும் உணர்வு மட்டுமல்ல, ஏழைகளின் வலியை நம் நெஞ்சங்களில் நிரப்பும் ஒன்று என்பதை உணர்த்தும் அற்புத காலம். இந்த காலத்தின் இன்றியமையாத அம்சங்களில் ஒன்றுதான் நோன்பு கஞ்சி - இந்திய முஸ்லிம் சமூகத்தின் வாழ்வோடும் வழிபாடுகளோடும் பின்னிப்பிணைந்த ஒரு உணவு வகை.
நிலவின் மடியில் பிறக்கும் உணவு
இந்த புனிதமான மாதத்தில், சூரியன் உதிப்பதற்கு முன்பாக 'ஸஹர்' எனப்படும் ஒரு எளிய உணவுடன் நோன்பைத் தொடங்குகிறார்கள் பக்தர்கள். உடலுக்கும் உள்ளத்திற்கும் வலு சேர்க்கும் இந்த எளிய உணவுக்குப் பின், அஸ்தமனம் வரை எந்த உணவோ பானமோ உட்கொள்வது இல்லை. நீண்ட நோன்புக்குப் பின்னர், மாலையில் நிலவின் தரிசனத்தோடு 'இஃப்தார்' எனப்படும் நோன்பு திறப்பு நிகழும். இந்த இஃப்தார் விருந்தில் இடம்பிடிக்கும் ஸ்பெஷல் உணவு தான் 'நோன்பு கஞ்சி.' வீடுகள் தோறும் விதவிதமாக தயாரிக்கப்பட்டாலும், நோன்பு கஞ்சிக்கு என ஒரு பாரம்பரிய சுவையும் மணமும் உண்டு.
தேவையான பொருட்கள்
பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கேரட், வெந்தயம், தேங்காய், நெய், உப்பு
செய்முறை
தேவையான அளவு தக்காளி, வெங்காயம், கேரட் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுது தயார் செய்து கொள்ளவும்.
பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து பின்னர் அரிசி, பருப்பு ஆகியவற்றை வேக வைத்து நன்கு வெந்தததும் கிளறிவிட வேண்டும்.
அதில் நெய் ஊற்றி, பின் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்த தாளித்து பரிமாறினால் சுவையோ சுவை.
சுவையின் ரகசியம்
நோன்பு கஞ்சியின் அடிப்படை மூலப்பொருள் அரிசி, அத்துடன் சேர்க்கப்படுவது பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், காய்கறிகள், புதினா, கொத்தமல்லி, தேங்காய் பால், சில இடங்களில் ஆட்டுக்கறி அல்லது கோழியும். நீண்ட நோன்பிற்குப் பின்பு உணவுக்குழாயை பாதிக்காத மென்மையான தன்மைக்கு, அரிசியும் பருப்பும் நன்றாக குழைய வேண்டும். இந்த எளிய கஞ்சியின் சுவையின் ரகசியம் அந்த இறுதிக்கட்டத்தில் கலக்கப்படும் தேங்காய் பாலில்தான் இருக்கிறது. இனிப்பு கலந்த அந்த லேசான சுவை, உடனடியாக சக்தியை நிரப்பி, ஒரு புத்துணர்வைத் தருவதோடு, நாவில் இனிய சுவையையும் விட்டுச் செல்கிறது.
இதயம் நிறைக்கும் கஞ்சி
பள்ளிவாசல்களில், மாலையில், கூட்டாக நோன்பு திறக்கும் நிகழ்வுகளில், பெரும் பாத்திரங்களில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிதான் ஹைலைட். வசதி படைத்தவர்கள் பள்ளிவாசல்களுக்கு பொருட்களையும் நிதி உதவியையும் அள்ளித்தந்து விடுவார்கள். ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும் இந்த நோன்பு கஞ்சி, ரமலான் மாதத்தின் சமநிலை மற்றும் சகோதரத்துவம் என்கிற உணர்வுகளை மென்மையாக நினைவுறுத்துகிறது.
பசியின் பாடங்கள்
பல மணிநேர பசிக்கு தீர்வு தரும் உணவு என்றாலும், அது வெறும் உணவாக மட்டுமே நோக்கப்படுவதில்லை. பசியோடிருக்கும் ஏழைகளின் வலியை, செல்வம் படைத்தவர்களும் உணர்ந்திட வைக்கும் ஒரு கருவி இந்த நோன்பு கஞ்சி. அதனால்தான் நோன்பு கஞ்சி உடன் பல வகையான சிற்றுண்டிகளும் பகிரப்பட்டாலும், இந்த எளிய கஞ்சிக்கு தனித்துவமான இடம் இருக்கிறது.
பக்தியும் பகிர்தலும்
இந்த கஞ்சி தயாரிக்கப்படும் முறையே பக்தியோடு செய்யப்படுகிறது. பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி சமைக்கும் பணியில், பலரும் பக்தியுடன் இணைந்து கொள்கின்றனர். அடுப்பில் கஞ்சியை கவனிப்பது, அதனை கிளறுவது என எல்லா வேலைகளிலும் ஒருவித பக்தி ரசம் கலந்திருக்கும். இந்த பணியை செய்வது, புண்ணியம் தேடித் தரும் என நம்பப்படுகிறது.
உடலை வருத்தி, உள்ளத்தை உயர்த்தும்
நோன்பு, என்பது உணவை மட்டுமே துறப்பது அல்ல; அது தன்னலம், பேராசை ஆகியவற்றை களைந்து, உயரிய பண்புகளை வளர்த்தெடுக்கும் ஒரு உயர்ந்த செயல். அதனுடன், உண்ண உணவில்லாத ஏழைகளின் துயரை நெஞ்சில் சுமந்து, 'அள்ளித் தருதல்' எனும் மகத்தான தர்மத்தையும் உணர்த்துவதே ரமலான் மாதத்தின் உண்மையான நோக்கம். அந்த நோக்கத்திற்கு நோன்பு கஞ்சி ஒரு சுவையான, சத்தான சாட்சி.