பழனிமலை முருகன் கோவில்; வரும் 16ம் தேதி மண்டல பூஜை நிறைவு..

Palani Malai Murugan Kovil-கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி, பழனிமலை முருகன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வரும் 16ம் தேதி, மண்டல பூஜை நிறைவடைகிறது.

Update: 2023-03-12 13:59 GMT

Palani Malai Murugan Kovil

Palani Malai Murugan Kovil-தமிழ் கடவுள் முருகன் மீது, அபரிமிதமான அன்பும், பக்தர்கள் கொண்ட பக்தர்களால், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கமாகி வருகிறது. அதிலும், முருகப் பெருமானின் கோவில்களில் திருச்செந்தூர் மற்றும் பழனி மலை கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, எப்போதுமே அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களில், அதிகளவில் பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில், பழனிமலை முருகன் கோவிலுக்கு முதலிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தைப்பூசம், சூரசம்ஹாரம், சித்திரை புத்தாண்டு நாட்களில், பழனிமலை தண்டாயுதபாணியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும், வேண்டுதல் நிறைவேற பழனிக்கு பாதயாத்திரை செல்வதும், காவடி எடுத்து வருவதும் இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆகம விதிப்படி கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அந்த வகையில் பழனி கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டல பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரை பூஜை நடைபெறுகிறது

அப்போது உச்சிக்கால பூஜைக்கு முன்பு மலைக்கோவிலில் உள்ள சண்முகர் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 12 புண்ணிய கலசங்கள் வைத்து வேத மந்திரங்கள் முழங்க மண்டல பூஜை செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையின்போது 12 கலசங்களில் உள்ள புண்ணிய நீரில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் 16 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்படுகிறது.

பழனி முருகன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருவதால் பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் பழனிக்கு வந்து சுவமி தரிசனம் செய்தபடி உள்ளனர். இதனால், வாரத்தின் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மட்டுமின்றி மற்ற நாட்களிலும், பழனிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மண்டல பூஜை நாட்களில், பழனி ஆண்டவரை தரிசிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தினமும் வந்தபடி உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம் உளளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வருகிற 16-ம் தேதியுடன் 48 நாள் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பிறகு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News