தினம் ஒரு திருமுறை
மறை - 2 பதிகம் - 25 பாடல் - 2
பண்ணி யாள்வதோ ரேற்றர் பான்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே
விளக்கவுரை
நன்மைகள் பலவும் உங்களை அடைய வேண்டுமாயின், அலங்கரித்து ஊர்ந்து ஆளும் விடையை உடையவனும், பால் போன்ற வெண்மையான பிறைமதியைக் கண்ணியாகப் புனைந்தவனும், மணம் கமழும் கொன்றை மாலைசேர்ந்த முடியினனும் ஆகிய புண்ணிய மூர்த்தியாகிய சிவபிரான் உறையும் புகலியை அடைந்து வழிபடுங்கள்.