ஆடி மாத பிறப்பு! அடுத்தடுத்து வரும் பண்டிகை

ஆடி மாதம் என்றாலே கோவில்களில் தினம் தினம் திருவிழா கோலம்தான்

Update: 2024-07-17 01:49 GMT

ஆடி மாதத்தில் ஆடி மாத பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு ஆடிப் பெருக்கு ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம் ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி என அனைத்தும் சிறப்புக்குரிய நாட்களாகும்

குறிப்பாக ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது அம்மனின் அருளை பெறுவதற்கு கூழ் வார்த்தல் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல், பால் குடம் ஏந்தி வருதல்:தீ மிதித்தல் ஆகிய வழிபாடுகளுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்:கோவில்களில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்யத் தொடங்கி உள்ளனர்

பண்டிகைகளின் தொடக்கம்

ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானத ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்

ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது ஆறு மக்களின் ஜீவ நாடியாதலால் அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப்படுகிறது ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம் தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில்தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது

எனவே ஆடி மாதம் அம்மன் பக்தர்களுக்கு விசேஷமான காலமாக விளங்குகிறது

பிதுர் கடமைகள்

ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால் ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி பௌர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பௌர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான கதம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும் அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

எலுமிச்சம் பழ விளக்கு

ஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால் நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும் ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்

இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17-ம் தேதி புதன்கிழமை துவங்கி, ஆகஸ்ட் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

ஆடி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் வாழ்க்கையை செழிக்க வைக்கும் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்த்து, அம்மனின் அருளை பெறுவதற்காக வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது

Tags:    

Similar News