மேல்மலையனூர்: சிவபெருமானுக்கும், சக்திக்கும் பித்தம் தெளிந்த புண்ணிய பூமி.

Melmalayanur Temple History-மலையே இல்லாத ஊரில் உலகில் உயர்ந்த இமயமலையில் குடிகொண்ட உத்தமியான மலையரசி சக்தி தேவி நிலைபெற்றதால் ‘மலையனூர்’ எனப் பெயர்பெற்றது

Update: 2022-10-30 10:09 GMT

Melmalayanur Temple History

Melmalayanur Temple History

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்களும், ஆடி மாதம், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

இத்திருக்கோவிலின் மேற்குபுற வாயிற்படியின் அருகில் கோபால விநாயகர் சன்னதியும், தெற்கே அன்னபூரணி சன்னதியும், வடக்கே பாவாடைராயன் சன்னதியும் தெற்கே குளக்கரையின் மேல் பெரியாயி சன்னதியும் அமைந்துள்ளது.

கோவில் தல வரலாறு:

கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபரா யுகம், கலியுகம் என்ற 4 யுகங்களுக்கு முன்பு மணியுகம் ஒன்று இருந்ததாகவும், இந்த யுகத்தில் சிவபெருமானுக்கும், பிரம்மனுக்கும் தலா 5 தலைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சிவபெருமானுக்கு சமமாக தனக்கும் 5 தலைகள் இருப்பதாக பிரம்மனுக்கு ஆணவம் அதிகமாகிறது. இந்த ஆணவத்தை அகற்ற பார்வதி நினைக்கிறார். அதன்படி பிரம்மன் வரும்போது நாதா என்று அழைக்கிறார். அதற்கு பிரம்மன், அனைத்தும் உணர்ந்த பார்வதிக்கு தன் கணவர் யார் என்று தெரியவில்லையோ என சிரிக்கிறார். பார்வதி, சிவபெருமானிடம், பிரம்மனின் ஆணவத்தைப்போக்க அவரின் 5 தலைகளில் ஒரு தலையை கிள்ளி எடுத்துவிட வேண்டும் என்று கூறுகிறார். அதன்படி சிவபெருமான் பிரம்மனை அழைத்து கண்டித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. முடிவில் சிவபெருமான் கோபத்துடன் பிரம்மாவின் 5 தலைகளில் ஒரு தலையை கிள்ளி எடுத்து விடுகிறார்.

தன் கணவரின் இந்த நிலைக்கு காரணமான பார்வதியை பார்த்து, நீ உன் அழகை இழந்து, வயதான கிழவியாய் மாறி, கொக்கிறகை தலையில் சூடி, கந்தல் ஆடையை அணிந்து அலைந்து திரிவாய் என்று சரஸ்வதி சாபமிட்டு விடுகிறார்.

பிரம்மன், சரஸ்வதி ஆகியோரின் சாபப்படி சிவபெருமானும், பார்வதியும் பல இடங்களில் அலைந்து திரிகின்றனர். பார்வதி இறுதியில் திருவண்ணாமலை சென்றடைகிறார். அங்குள்ள குளத்தில் உள்ள தீர்த்தத்தில் மூழ்கியவுடன் பார்வதியின் வயதான தோற்றம் மறைந்து பழைய உருவத்தை அடைகிறார். பின்பு அங்கிருந்து கிழக்கு பக்கமாக மேல்மலையனூருக்கு வருகிறார். இரவு ஆகிவிடவே தாயனூர் என்ற ஊரில் ஏரிக்கரை அருகே தங்கி விடுகிறார்.

பின்னர் குளித்து விட்டு மேல்மலையனூருக்கு செல்ல முடிவெடுத்தார். குளிக்க போகும் முன்பு தனது ஆரத்தை கழற்றி வைத்தார். அந்த ஆரம் ஒரு பெண்ணாக மாறி பார்வதியை வணங்கியது. அவருக்கு ஆசி வழங்கிய பார்வதி, இதே இடத்தில் நீ முத்தாரம்மன் என்ற பெயரில் விளங்கி மக்களுக்கு அருளாசி வழங்குவாய் என்று கூறிவிட்டு மேல்மலையனூருக்கு பார்வதி புறப்பட்டார்.

மேல்மலையனூர் அப்போது மலையரசன்பட்டிணம் என்று தலபுராணத்தில் உள்ளது. மலையரசன்பட்டிணத்தில் மலையரசன் என்ற அரசன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய பூங்காவனத்தில் புற்றுருவாய் பார்வதி வீற்றிருக்கிறார். அங்கு காவலாளியாக மீனவ குலத்தை சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். திடீரென உருவான புற்றுக்கு அந்த மீனவர்கள் மஞ்சள், குங்குமம் வைத்து புடவை சாற்றி, தீபமேற்றி வழிபட்டு வருகின்றனர்.

இந்த விஷயம் மன்னனின் காதுக்கு எட்டுகிறது. அந்த புற்றை இடித்து அப்புறப்படுத்துமாறு கூறுகிறார். மீனவர்கள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் புற்றை இடிக்க கடப்பாரையை ஓங்கியவுடன் பூதகணங்கள் உருவாகி மன்னன், மீனவ காவலாளிகளை தவிர அங்கிருந்தவர்களை மறைய செய்து விடுகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த மலையரசன் தன் தவறை மன்னிக்குமாறு அந்த புற்றின் கீழ் மண்டியிட்டு வணங்கினான். அதில் இருந்து பூங்காவனத்தம்மனாக பார்வதி தோன்றி ஈசனின் சாபத்தை போக்கவே நான் இங்கு வந்து தங்கி இருக்கிறேன். என்னை நம்பி வணங்குவோருக்கு வேண்டிய வரங்களை அளிப்பேன் என்று கூறி மன்னனுக்கு ஆசி வழங்கி மறைந்தார். அன்றில் இருந்து மீனவ பரம்பரையினரே இந்த கோவிலில் பூஜை செய்து வருகின்றனர்.

பார்வதி, மலையரசன்பட்டிணத்தில் புற்றாக இருக்கிறார். தங்கள் அங்கு சென்றால் பாவவிமோசனம் கிடைக்கும் என சிவபெருமானிடம், மகா விஷ்ணு கூறுகிறார். அதன்படி பல இடங்களில் அலைந்து திரிந்த சிவபெருமான் இறுதியில் மேல்மலையனூருக்கு வருகிறார்.

பின்னர் பார்வதியிடம், உன் கணவருக்கு எது சாப்பிடக் கொடுத்தாலும் அவர் கையில் உள்ள கபாலம் சாப்பிட்டுவிடும். அதனால் நீ உலகத்தில் உள்ள பயிர் பச்சைகளை எல்லாம் வரவழைத்து உணவாகச் சமை. பின்பு அதை மூன்று கவளமாகத் தயார் செய். சிவபெருமான் இங்கு வந்தவுடன் அவரை சுடுகாட்டில் தங்க வைத்து விடு, பின்பு நவதானியங்களால் செய்யப்பட்ட சுண்டல், கொழுக் கட்டை ஆகியவற்றை சமைத்து அவற்றை ஒன்றாக பிசைந்து 3 சிவலிங்கங்களாக ஆக்கிக்கொள். முதல் கவளத்தை சிவபெருமான் கையில் உள்ள திருவோட்டில் போடு, அதை பிரம்மனின் தலை சாப்பிட்டு விடும். 2-வது உருண்டையையும் போடு அதையும் அந்த தலை சாப்பிட்டு விடும். 3-வது உருண்டையை போடுவது போல் பாவனை செய்து கீழே இறைத்துவிடு. உணவின் சுவையில் மயங்கி கிடக்கும் பிரம்மனின் தலை, தன் நிலையை மறந்து சிவபெருமான் கையை விட்டு கீழே இறங்கி சாப்பிட தொடங்கும். அப்போது நீ ஆக்ரோஷமாக உருவெடுத்து உன் வலது காலால் அந்த தலையை மிதித்து விடு என்று மகாவிஷ்ணு ஆலோசனை கூறுகிறார்.

அதன்படியே பார்வதி செய்ய சம்மதிக்கிறார். பார்வதி தங்கி இருக்கும் இடத்துக்கு வந்த சிவபெருமான் பிச்சை என்று கேட்கிறார். வந்திருப்பது தன் கணவர் என்பதை உணர்ந்த பார்வதி, தன் மகனான விநாயகரை அழைத்து தந்தையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும், உட்கார்ந்தால் தூங்கி விடுவாய், ஆகையால் நின்று கொண்டே காவல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி விநாயகரும் காவல் புரிகிறார்.

உள்ளே சென்ற பார்வதி, மகாவிஷ்ணு கூறியபடி 3 கவளங்களை தயார் செய்து வைத்துவிட்டு, சிவபெருமான் இருக்கும் இடத்திற்கு வந்து அவரை அழைத்துச் சென்று சுடுகாட்டில் தங்கி இருக்குமாறும் காலையில் வந்து பார்ப்பதாகவும் கூறிவிட்டு வருகிறார். சுடுகாட்டில் தங்கிய சிவபெருமான் அங்குள்ள சாம்பலை எடுத்து உடலெங்கும் பூசி கொண்டு படுத்து தூங்குகிறார்.

மறுநாள் காலையில் பார்வதி 3 கவளங்கள் உள்ள தட்டை எடுத்துக்கொண்டு மயானம் வருகிறார். அங்கு மகாவிஷ்ணு கூறியபடியே முதல் உருண்டையை போடுகிறார். அதை பிரம்மனின் தலை சாப்பிட்டு விடுகிறது. 2-வது உருண்டையையும் போடும்போது அதையும் அந்த தலை சாப்பிட்டு விடுகிறது. 3-வது உருண்டையை போடுவதுபோல் பாவனை செய்து கீழே இறைத்து விடுகிறார். உணவின் சுவையில் மயங்கிய பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து சிவபெருமானின் கையை விட்டு கீழே இறங்கியது.

உடனடியாக பார்வதி ஆங்கார உருவம் கொண்டு பிரம்மனின் தலையை தன் வலது காலால் மிதிக்கிறார். இதனால் சிவபெருமானுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. உடனே அவர் ஆனந்த தாண்டவம் புரிந்தார். சிவபெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்ததால் சிவபெருமானுக்கு தாண்டேஸ்வரர் என்றும், ஆங்காரம் உருவம் கொண்டதால் பார்வதிக்கு அங்காளம்மன் என்றும் ஆனந்தாயி என்றும் பெயர் பெற்றார்.

அம்மனின் கோபத்தை தணிக்க தேவர்கள் முயன்றனர். ஆனால், முடிய வில்லை. முடிவில் மகாவிஷ்ணுவிடம் ஆலோசனை கேட்கின்றனர். மகாவிஷ்ணு, தேவர்களிடம் அழகான தேரை உருவாக்குங்கள். அதன் மேல் பீடத்தில் நான் கலசமாக மாறி விடுவேன். அதில் அம்மன் அமர்ந்ததும் கோபம் தணியும் என்று கூறுகிறார். அதன்படி 4 வேதங்களும் சக்கரங் களாகவும், தேவர்கள் ஒருசிலர் தேரின் கால்களாகவும், ஆகாயம் தேர் சீலைகளாகவும், மகாவிஷ்ணு தேரின் மீது உச்சியில் கலசமாகவும் மாறி அழகான தேர் பூங்காவனத்தின் எதிரே நின்றது.

இதைப்பார்த்த அங்காளம்மன் அதன் மீது ஏறி அமர்ந்தார். மற்ற தேவர்கள் அந்த தேரை வடம் பிடித்து பூங்காவனத்தை சுற்றி வந்தனர். அம்மனின் கோபம் முற்றிலும் தணிந்தது. தேவர்கள் அம்மன் மீது பூமாரி பொழிந்தனர். அங்காளம்மன் மனம் குளிர்ந்து தேவர்களை வாழ்த்தியதோடு தான் இங்கேயே கோவில் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் அளிக்கப்போவதாக கூறினார். அதன்படி இன்றும் அங்காளம்மன் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அளித்து பாதுகாத்து வருகிறார்.

அதன்படி அங்காளம்மனும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய பெருமான் தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயருடனும் அவ்விடத்து எழுந்தருளியிருந்து அங்கு வந்து வணங்கும் உயிர்களுக்குக் கருணை செய்து வரங்களை அருளி வருகின்றனர்.

பிரம்மஹத்தி தோஷம் கொண்ட சிவன், பூங்காவனத்தாயின் இருப்பிடமான மலையனூருக்கு வந்து இரவில் தங்கியதால் அந்த இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுவதாக கூறுவர்.

சிவராத்திரிக்கு மறுநாள் பூரண அமாவாசை தினம் இந்நாளில் அனைத்து வித மூலசக்திகளான 63 சக்திகளும், 9 நவசக்திகளாகி, 7 சப்த சக்திகளாகி, 5 பஞ்ச சக்திகளாக திகழ்ந்து முப்பெரும் தேவியராக விளங்கி ஒன்று திரண்டு எழுந்த மூல முழு சக்தியாக விளங்கிடும் நாள்

சிற்சக்தி என்ற ஒரே சக்தியாக, ஓம் சக்தி என்ற ஒங்கார சக்தியாக, ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவாக சூறையிடுவதாக உணவு வழங்குவதாக கருதப்படுகிறது. ஆகையால் ஒம் சக்தி என்ற சிற்சக்தியான அங்காளியால் இறைக்கப்படும் உணவை சாப்பிட ஆவிகளும், ஆன்மாக்களும் கீழே இறங்கும்போது அங்காளியானவள், ஆவி ஆன்மாக்களைத் தலைகளாக கருதி அவற்றை ஒவ்வொன்றையும் எலுமிச்சைப் பழத்தை ஊசியில் கோர்த்து மாலையாய் அணிவிப்பதை போன்ற தலைகளால் மாலையாக கோர்த்து தலை மாலைச் சூடிய ஆங்காளி, அங்காளியாக விளங்குகிறாள்.

தற்போது அம்மனுக்குச் சைவ பூஜை நடக்கிறது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மன நிம்மதி தேடி வரும் பக்தர்கள் ஏராளம். அவர்கள் நிம்மதி தேடி தேர்ந்தெடுத்த இடம் 'சுடுகாடு'. அவர்கள் அமைதியாகச் சுடுகாட்டில் படுத்து ஆழ்ந்த நித்திரையில் உறங்கி விடுகிறார்கள்.

தூங்கி எழுந்ததும் அதுவரை மனதில் எழுந்த போராட்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் அகன்று தெளிந்த சிந்தனையும், ஆத்மதிருப்தியும் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். அமாவாசை இரவில் கோவிலுக்குச் சென்றால் சுடுகாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆழ்ந்த நித்திரை செய்து கொண்டு இருக்கும் காட்சியைப் பார்க்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News