மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமண விழா இன்று பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதான விருந்து வழங்கப்பட்டது.
இந்துக்களில் சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள் இறைவன் சிவ பெருமான்- அன்னை பார்வதி தேவி திருமண விழாவை காண்பதை பெரிய பேறாக கருதி வருகிறார்கள். இதன் காரணமாக பெரும்பாலான சிவாலயங்களில் இறைவன்- இறைவிக்கு திருக்கல்யாண காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எத்தனை கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றாலும் அதற்கெல்லாம் முத்தாய்ப்பான திருக்கல்யாண திருவிழாவாக கருதப்படுவது தான் மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருக்கல்யாணம் ஆகும்.
மதுரையின் அடையாளமே மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் தான். அத்தகைய சிறப்புக்குரிய மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை பெருவிழாவாக நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் 12 நாட்கள் திருவிழாவாகும். அந்த வகையில் மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திரு விழா கடந்த 10 நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
எட்டாம் நாள் மதுரையின் அரசி மீனாட்சி அன்னைக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒன்பதாம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் திக்விஜயம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரடியாக பங்கேற்று இறைவன்-இறைவி திருக்கல்யாண காட்சியை கண்டு மகிழ்ந்தார்கள். அப்போது விழாவில் பங்கேற்ற சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக சுந்தரேஸ்வரர் மீனாட்சி தாயாருக்கு மாங்கல்யம் அணிவித்ததும் பெண்கள் தங்களது தாலியை பிரித்து புதிதாக மாற்றிக்கொண்டார்கள்.
மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது திருமண விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதினார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இங்கும் திருக்காட்சி நாளை மறு நாள் நடைபெற உள்ளது. இந்த விழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.