பக்தர்கள் இன்றி வடபழனி முகருகன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

முழு ஊரடங்கு தினமான நாளை வடபழனி முகருகன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அனுமதியில்லை யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.;

Update: 2022-01-22 07:16 GMT

வடபழனி முருகன் கோயில்

வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு தற்போது கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ம்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.2.56 கோடி செலவில் 34 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் வடபழனி முருகன் கோவிலில் நாளை (23-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 17ம்தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது. 20ம் தேதி முதல் யாகசாலை பூஜை தொடங்கியது.

நேற்று 2-ம் கால மற்றும் 3-ம்கால யாக பூஜைகள் நடைபெற்றது.. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மேலும் நேற்று அஷ்ட பந்தன மருந்து இடிக்கும் வைபவம் நடைபெற்றது. பச்சை சுண்ணாம்புகல், கற்காவி, கருங்குங்கிலியம், கொம்பரக்கு, ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய 8 பொருட்கள் சேர்த்து இடித்து அஷ்டபந்தன கலவை தயாரித்து சன்னதிகளின் பீடத்தில் சாத்தப்பட்டது.

நேற்று மாலை தங்கமுலாம் பூசப்பட்ட 7 தங்க கலசங்கள் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன. இன்று காலை 8.30 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 5-ம்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.

நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு 6-ம்கால யாகசாலை பூஜை துவங்குகிறது. காலை 7 மணிக்கு பரிவார யாகசாலை பூஜையும், 9 மணிக்கு பிரதான யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

9.30 மணிக்கு யாத்ரா தானம், திருக்கலசங்கள் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு ராஜகோபுரங்கள் மற்றும் அனைத்து விமானங்களின் கும்பங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்துகின்றனர்.

காலை 11 மணிக்கு அனைத்து பரிவாரங்களுடன் முருகனுக்கு மகாகும்பாபிஷேகம் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முருகபெருமான் ஆலயத்தை வலம் வந்து அருள் பாலிக்கிறார்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. மேலும் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. யூடியூப் சேனல் மூலம் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் நேரடியாக காண அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags:    

Similar News