தெரிந்த பிள்ளையார் - தெரியாத வரலாறு - திருச்சி உச்சிப்பிள்ளையார்

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் வரலாறு பற்றி பார்க்கலாம்.32 விநாயகரின் வரலாறும் வரும் நாட்களில் இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக தருகின்றோம்.

Update: 2021-07-31 21:46 GMT

திருச்சி உச்சிப்பிள்ளையார்


தெரிந்த பிள்ளையார்... தெரியாத வரலாறு... திருச்சி உச்சிப்பிள்ளையார்

விநாயகரின் 32 வடிவங்கள்: 1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. துவிஜ கணபதி, 7. சித்தி கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி, 12. லட்சுமி கணபதி, 13. மகா கணபதி, 14. விஜய கணபதி, 15. நிருத்த கணபதி, 16. ஊர்த்துவ கணபதி, 17. ஏகாட்சர கணபதி, 18. வர கணபதி, 19. த்ரயக்ஷர கணபதி, 20. சிப்ரப்ரசாத கணபதி, 21. ஹரித்ரா கணபதி, 22. ஏகதந்த கணபதி, 23. சிருஷ்டி கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. ருணமோசன கணபதி, 26. துண்டி கணபதி, 27. துவிமுக கணபதி, 28. மும்முக கணபதி, 29. சிங்க கணபதி, 30. யோக கணபதி, 31. துர்க்கா கணபதி, 32. சங்கடஹர கணபதி.

இந்த 32 வடிவங்களில், முக்கியமானவர் ருண மோசன கணபதி. இவரின் மற்றொரு பெயர், ரண மோசனர் அல்லது ரிண மோசனர். நான்கு கரங்களுடன் வெள்ளை நிறத்தினைக் கொண்ட இவரைத் தொழுது வர, கடன் தொல்லைகளிலிருந்தும், இதர துன்பங்களிலிருந்தும் நம்மைக் காத்தருள்வார் என்பது ஐதீகம் .

சரி வாங்க நம்ம திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் வரலாறு பற்றி பார்க்கலாம்... 32 விநாயகரின் வரலாறும் வரும் நாட்களில் இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக தருகின்றோம்.


உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார். இதைத்தவிர பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்தும் இன்றும் அழியாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

மூன்று தலைகளை கொண்ட திரிசிரன் என்ற அசுர அரசன் இந்தப் பகுதியை ஆண்ட போது திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்டு பின்பு சிராப்பள்ளி என்று மாறி தற்சமயம் திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்பட்டு வருகிறது அப்படின்னு வரலாறு சொல்லுது.

முன்னொரு காலத்துல ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்ட விபீஷணர், தன் தேசமான இலங்கைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாராம். ராமரின் பட்டாபிஷேகத்தில் விபீஷ்ணர் கலந்து கொண்டதற்காக நன்றி கூறி, ரங்கநாதரின் சிலை பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. அதனை தன் கையில் எடுத்துக்கொண்டு தெற்கு பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த விபீஷணனுக்கு களைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் காவிரி கரையோரத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினார்


தன் கையிலுள்ள சிலையை, அவர் பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஒரு சிறுவனிடம், சற்று நேரம் பத்திரமாக வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு தன் கண்களை மூடி சிறிது நேரம் ஓய்வெடுத்தாராம். ஆனால் அந்த சிறுவனோ, சிலையை தரையில் வைத்துவிட்டு அருகில் உள்ள மலையின் மீது சென்று அமர்ந்து கொண்டான். களைப்பாறி விட்டு கண்களைத் திறந்து பார்த்த விபீஷணனுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.

அந்த சிறுவனை தேடிப்பார்த்தால் காணவில்லை. தரையில் இருந்த ரங்கநாதரின் சிலையை எடுக்க முயன்றபோது அது நகரவில்லை. அந்த விநாயகர் தான் சிறு பாலகனின் ரூபத்தில் வந்து, அந்த சிலையானது இலங்கைக்கு செல்லாமல் தடுத்து இருக்கின்றார். தற்போது அந்த சிலை ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத பெருமாளாக காட்சியளிக்கின்றது என்று வரலாறு சொல்கின்றது. மலையின் உச்சியில் அமர்ந்திருந்த விநாயகரை கண்டுபிடித்த விபீஷணர், விநாயகரின் தலையில் ஒரு கொட்டு வைத்ததாகவும் வரலாறு கூறுகிறது.


இப்பகுதியில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வரும் நேரம் அது. முன்னதாகவே தன் தாய்க்கு செய்தி அனுப்பிவிட்டு, தாயின் வருகைக்காக காத்திருந்தாள். அவளின் தாய்வீடு காவிரி கரைக்கு அந்தப்பக்கம் உள்ளது. அந்நேரத்தில் காவிரிக்கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

என்ன செய்வது என்று புரியாத அந்த கர்ப்பவதி அந்த ஈசனை நினைத்து பிரார்த்தனை செய்தாள். அந்த சமயத்தில் தாய் வேடத்தில் வந்த அந்த ஈசன் தான், கர்ப்பிணிக்கு சுகப்பிரசவமாக உதவிசெய்து, நலமாக பிள்ளையை பெற்றெடுக்க அருள்பாவித்தார். சிறிது நேரம் கழித்து கர்ப்பவதியின் நிஜமான தாய் வந்த பின்புதான் அந்த ஈசனே வந்து உதவியது அவர்களுக்கு புரிந்தது. அந்த இடத்தில் மட்டுவார்குழலியுடன் ஈசன் அனைவருக்கும் காட்சி தந்தார். இதன் மூலமாகத்தான் தாயுமான சுவாமிகள் என்ற பெயரினை அவர் பெற்றார். இந்தக் காலத்திலும் தாயுமான சுவாமியை வழிபட்டால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.



 


Tags:    

Similar News