ரூ.5 கோடியில் கரூர் திருமுக்கூடலூர் அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள்

ரூ.5 கோடியில் கரூர் திருமுக்கூடலூர் அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணிகளை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.;

Update: 2024-02-04 12:40 GMT

கரூர் திருமுக்கூடல் அகஸ்தீஸ்வரர் கோவில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

கரூர் திருமுக் கூடலூரில் 1000 ஆண்டுகள் தொன்மையான அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலினை ரூ.5 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யும் திருப்பணியினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட எஸ்.பி.முனைவர் பிரபாகர், கரூர் எம்.பி. ஜோதிமணி, எம்.எல்.ஏக்கள் மாணிக்கம் (குளித்தலை).சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்) அறநிலையத்துறை இணை இயக்குனர் குமரதுரை, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலைத்துறை புது பொலிவுடன் வீறு நடை போடுகிறது. முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷமான திருக்கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத காரணத்திற்காக முதலமைச்சர், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் நடத்த இரண்டு நிதியாண்டுகளில் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கினார். இந்த நிதியுடன் உபயதாரர்களின் பங்களிப்பையும் சேர்த்து 197 திருக்கோயில்களில் ரூ.304.84 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 12 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளது. 13 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு இந்தஆண்டில் நடைபெறும்.

வரலாற்றில் ராஜராஜ சோழன் காலத்தில் தான் திருக்கோயில்களின் பணிகள் உயர்வு பெற்றது என்று சொல்வார்கள். அதேபோல் ராஜராஜ சோழனுக்குப் பிறகு இந்த ஆட்சியில் தான் சிதிலமடைந்த திருக்கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஒட்டுமொத்தமாக ரூ. 5 கோடி மதிப்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் புனரமைத்தல் அதில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அம்பாள் சன்னதி புனரமைத்தல் பணிகளும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சோபன மண்டபம் மீள கட்டும் பணி. ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மடப்பள்ளி, ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் உப சன்னதிகள் வர்ணம் பூசுதல், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் தெற்கு திருமதில் கட்டுதல், ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கு வடக்கு கிழக்கு திருமதில் புனரமைத்தல், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ராஜகோபுரம் கங்காரம் புனரமைத்தல், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் வசந்த மண்டபம் மீள கட்டுதல், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் யாகசாலை ( அபிசேக மண்டபம் ) மீள கட்டுதல், ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் சுப்பிரமணிய சன்னதி கட்டுதல் போன்ற 15 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் திருக்கோயிலுக்கு எப்போது குடமுழுக்கு நடைபெற்றது என்ற குறிப்பு இல்லாமல் இல்லை. கோயிலில் உள்ள மணி முத்தீஸ்வரர் சன்னதிக்கு 2002 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்ததற்கான கல்வெட்டு உள்ளது. ஆனால் மூலவரான அகஸ்தீஸ்வாருக்கு எப்பொழுது குடமுழுக்கு நடந்தது என்ற குறிப்புகள் இல்லை.

இது போன்ற குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களை ஒவ்வொன்றாக கணக்கில் எடுத்து புனரமைக்கப்பட்டு வருகிறது. 400 ஆண்டுகள் பழமையான திருவெற்றியூர் ஆதி கேசவ பெருமாளுக்கு கூட இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. நேற்று வரை 1339 திருக்கோயிங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

துணைமேயர் சரவணன் உதவி ஆணையர் /செயல் அலுவலர் நந்தகுமார், தக்கார் / உதவி ஆணையர் ஜெயதேவி, மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் திரு.கு.பால்ராஜ், கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News