காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.;
அத்திவரதரால் புகழ் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதுமான காஞ்சிபுரத்தில் உள்ள பழமையும் வரலாற்று சிறப்புமிக்க ஆலயம், தேவராஜ சுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு வைகாசி திருவிழா இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலையில் இருந்து தேவராஜ சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் இறங்கி வந்து, தேசிகர் சன்னதியில் எழுந்தருளினார். திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் திருக்கோவிலில் உள்ள கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள்.
கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்தார். கொடியேற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன் மற்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவினை முன்னிட்டு, ஆலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. காஞ்சிபுரம் எஸ்.பி.சுதாகர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.