திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் வரலாறு
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கிருஷ்ணராஜ சர்மா மன்னன் கட்டிய வரதராஜ பெருமாள் கோவில் பற்றிய செய்தி தொகுப்பு.
திருநெல்வேலி மாவட்டத்தின் பெற்ற வரதராஜ பெருமாள் எனும் வீரராகவ பெருமாள் கோவில் வரலாறு
முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த இந்த பகுதியைச் சந்திர வம்சத்து அரசரான கிருஷ்ணவர்மன் என்னும் மன்னன் நீதி, நெறி தவறாமல் செங்கோல் செலுத்தி ஆட்சி செய்து வந்தான். இறை வழிபாட்டில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் கிருஷ்ணவர்மன் முக்கண் முதல்வனாகிய பரமேஸ்வரனுக்கும், பாற்கடலில் பாம்பணை மீது பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனுக்கும் எண்ணற்ற கோவில்களை இந்தப் பூவுலகில் கட்டியெழுப்புவதை தனது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்தான்.
அவ்வாறே பல பழைய திருக்கோயில்களை புனரமைத்தும், புதிய திருக்கோயில்களை கட்டியும், அதற்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்தும் அழகு பார்த்துள்ளான். தான் கட்டியெழுப்பிய கோவிலில் தினசரி வழிபாடுகளும், வருடாந்திர உற்சவங்களும் தவறாமல் நடைபெற பல்வேறு கொடைகளையும், மானியங்களையும் அள்ளி வழங்கினான். இப்படி இரவும், பகலும் கோவில், கோவில் என்றே வாழ்ந்து வந்த மன்னனின், நாடு மீது ஆசை கொண்ட பக்கத்து நாட்டு மன்னன் நான்கு வகை படைகளையும் தனது நாட்டிலிருந்து திரட்டி கொண்டு போருக்கு வந்தான். இதனை பற்றிச் சிறிதும் சிந்தித்து பார்க்காத மன்னன் கிருஷ்ணராஜ சர்மா, நிலைமையை எண்ணி கலக்கமுற்றான்.
இந்த இக்கட்டான நிலைமையில் தான் வணங்கும் தனது ஆத்மார்த்த மூர்த்தியாகிய தனது அரண்மனையில் உறையும் வரதராஜ பெருமாள் முன்னர் சரணாகதி அடைந்து, நாராயண மந்திரத்தை உச்சரித்தபடியே கண்கள் கலங்கியபடி அமர்ந்திருந்தார். தனது பக்தனின் நிலைமையைக் கண்டு மனம் இறங்கிய பரந்தாமன், தானே கிருஷ்ணராஜ சர்மா மன்னனாக உருவெடுத்துப் படைகளை திரட்டிக் கொண்டு போர்க்களம் புகுந்தார். போர்க்களத்தில் படையெடுத்து வந்த எதிரி நாட்டு மன்னனை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய பெருமாள், தனது இருப்பிடமான பாற்கடலுக்கு சென்று பாம்பணையில் துயில் கொண்டார்.
நடந்த விஷயங்களை அறிந்த மன்னன் கிருஷ்ணராஜ சர்மா தனக்காகத் தான் வணங்கும் பெருமாளே வந்து போரிட்டதை எண்ணி மகிழ்ந்து பலவாறு போற்றி துதிக்கிறான். அவனது தூய பக்திக்கு இறங்கிய பெருமாள் அவனுக்குக் காட்சியளித்து அருள்புரிகிறார். தனக்கு காட்சியளித்த பெருமாளுக்கு அந்த இடத்திலேயே கோவில் ஒன்றை கட்டிய மன்னன் கிருஷ்ணராஜ சர்மா, தனக்காகப் போரிட்டு வீரதீரச் செயல் புரிந்த பெருமாளை வீரராகவ பெருமாள் என்ற பெயரில் அங்கு பிரதிஷ்டை செய்கிறான்.
மன்னன் கிருஷ்ணராஜ சர்மா தனக்கு காட்சியளித்த பெருமாளை இங்கு எழுந்தருளிச் சேவை சாதிக்க வேண்டிட, தனது பக்தனுக்காகப் பெருமாளும் இங்கு வீரராகவ பெருமாளாக எழுந்தருளிக் காட்சித் தருகிறார். மன்னன் கிருஷ்ண ராஜ சர்மா தான் அரண்மனையில் வைத்து வணங்கிய வரதராஜ பெருமாளை இங்கு உற்சவ மூர்த்தியாக எழுந்தருளச் செய்து திருவிழாக்களையும் நடத்தி வைத்தார். வீரராகவ பெருமாள் என்ற பெயரில் இங்குப் பெருமாள் எழுந்தருளியதால் இந்தப் பகுதியும் வீரராகவபுரம் என்ற பெயரைப் பெற்றது என இந்தக் கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.
கிழக்கு திசை நோக்கிக் காட்சியளிக்கும் இந்தக் கோவிலின் வாயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் சற்றே உயர்ந்து நிற்கிறது. இந்த ராஜ கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், முன்மண்டபத்தில் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாகக் கருவறைக்கு நேர் எதிராகக் கருடாழ்வார் காட்சித் தருகிறார். அவரை வணங்கி உள்ளே சென்றால் அர்த்த மண்டபம் தாண்டி உள்ளே கருவறையில் ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதராக ஸ்ரீ வீரராகவ பெருமாள் நான்கு கரங்கள் உடன் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதராக ஸ்ரீ வரதராஜ பெருமாள் சேவை சாதிக்கிறார். மன்னனுக்காகத் தானே அவன் உருவில் வந்து போர்க்களம் புகுந்த பெருமாள், நமக்காக வேண்டும் வரங்களை தந்து அருள்பாலிக்கிறார்.
திருக்கோவில் பிரகாரத்தில் முறையே சக்கரத்தாழ்வார், நரசிம்மர், வேதவல்லி தாயார், பெருந்தேவி தாயார், பன்னிரு ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் ஆகியோரின் சன்னிதி அமையப்பெற்றுள்ளது. வடக்கு பிரகாரத்தில் பரமபத வாசலும் அதற்கு வெளியே பரமபத மண்டபமும் உள்ளது.
இங்குள்ள வரதராஜ பெருமாள் மீது கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் " வரதராஜம் உபாஸ்மஹே " என்று தொடங்கும் பாடலைச் சாரங்கா ராகத்தில் அமைத்துப் பாடியுள்ளார். இந்தக் கோவிலில் தினமும் காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
வைகுண்ட ஏகாதசி அன்று இந்தக் கோவிலின் பெருமாள் வரதராஜர், அதிகாலை முதல் பிற்பகல் வரை சயன கோலத்தில் காட்சியளிப்பார். புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் இங்குக் கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் இங்கு நடைபெறும் பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழாவில் பத்தாம் நாள் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்தக் கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கும் சக்கரத்தாழ்வார் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் காட்சித் தருகிறார். இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். இவருக்குத் தங்க கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இவருக்குப் பின்புறம் ஒரே விக்கிரகத்தில் நரசிம்மரும் காட்சித் தருகிறார்.
சித்திரை மாதம் பிரம்மோற்சவம், வைகாசி மதம் நம்மாழ்வார் திருநட்சத்திரம், ஆடிப் பூரம், ஆவணி பவித்திர உற்சவம், ஆவணி உறியடி உற்சவம், புரட்டாசி விஜய தசமி பாரிவேட்டை, புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட சேவை, மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா, தை மாதம் கணு ஊஞ்சல் உற்சவம், பங்குனி மாதம் ராம நவமி உற்சவம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.