குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?

உங்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கும், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

Update: 2024-04-29 11:59 GMT

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

பொது பலன்கள்

குருபகவான், கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம் ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ரிஷபம் குருவின் பகைவீடு. அதேபோல குருவின் விசேஷப் பார்வைகளான 5, 7,9-ம் பார்வைகள் முறையே கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளில் பதிகின்றன. அதோடு கோசார ரீதியாக மீனத்தில் ராகு, கன்னியில் கேது என்ற அமைப்பும், கும்பத்தில் சனி இருக்கும் அமைப்பும் காணப்படுகிறது.

இத்தகைய அமைப்பின் காரணமாக இந்த குரு பெயர்ச்சியினால் உலக அளவில் ஒருவித பரபரப்பான சூழல் காணப்படும். பகை நாடுகளின் அச்சுறுத்தல், பிரபலங்களின் உடல்நலத்தில் குறைபாடுகள் இவை தோன்றினாலும் சரியான நடவடிக்கைகளால் அனைத்தும் சீராகும். உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயரும்.

புதிய கண்டுபிடிப்புகளால் வான் வெளியில் பல அதிசயங்கள் நிகழ்த்தப்படும். கொடுமையான நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களின் ஆரோக்யம் பாதுகாக்கப்படும். மக்களிடையே சகோதர மனப்பான்மை, தெய்வீக நாட்டம், வலைதளங்களில் பகிரப்படும் விஷயங்களின் உண்மையை அறிதல் போன்றவற்றால் அமைதி நிலவும். மகான்கள் வழிபாடு, முதியோரை மதித்தல் போன்ற செயல்களால் இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நன்மை தருவதாக அமையும்.

மிதுன ராசிக்கான பலன்கள்

மிதுனம் புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! நீங்கள் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது சுக ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்துக்கு வருகிறார், குருபகவான். இந்த அமைப்பில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 4,6,8-ம் இடங்களில் பதிகின்றன. இதனால் உங்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கும், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது. வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கடன் தருவது, பெறுவதை உடனுக்குடன் எழுதி வையுங்கள். பெண்கள் சமையலறையில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம்.

தொழிலமைப்பில் லாபம் சீராகும்.பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம். ரசாயனத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கப் பணியில் உள்ளோர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். கலைஞர்கள், சினிமாத்துறையினர் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம்.


நட்சத்திரபலன்கள்

மிருக சீரிஷம் 3, 4 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.

திருவாதிரை:

இந்த குரு பெயர்ச்சியின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

புனர்பூசம் - 1, 2, 3 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியால் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

Tags:    

Similar News