குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?

இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுவதால் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும்.

Update: 2024-04-30 13:00 GMT

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

துலாம் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே! நீங்கள் தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது விரய ஸ்தானம் - தனவாக்கு ஸ்தானம் - சுக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

தற்போதைய பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பன்னிரண்டு, இரண்டு, நான்காம் இடங்களில் பதிவது சிறப்பு. இந்த அமைப்பின் காரணமாக உங்கள் முயற்சிகள் பலிதமாகும், வாக்கில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம். பதவி, ஊதியம் உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரலாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு தடைப்பட்டால் தளரவேண்டாம், அது நன்மைக்கே. வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். உறவுகள் யாரிடமும் வீண் உரசல் வேண்டாம். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. விடுபட்ட முன்னோர் கடன்களை அவசியம் நிறைவேற்றுங்கள். பெண்கள் திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம். பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.

தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அது தொடர்ச்சியாக இருக்க உழைப்பு மிக முக்கியம். தேவையற்ற வங்கிக் கடன்களைத் தவிருங்கள். அரசியலில் உள்ளவர்கள் முகஸ்துதி நபர்களை ஒதுக்குவது முக்கியம். பொது இடத்தில் வாக்குறுதிகளைத் தவிருங்கள். அரசுப்பணியில் உள்ளோர், நிதானமாகச் செயல்படுவது நல்லது. பணத்தைக் கையாள்வோர் நிதானத்துடன் இருப்பது முக்கியம். கலைஞர்கள், சினிமாத் துறையினர் வாய்ப்புகள் வரப்பெறுவீர்கள். படைப்பு ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம். மாணவர்களுக்கு மதிப்பு உயரும். இரவில் வெளி இடங்களில் தங்க வேண்டாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். நரம்பு, எலும்பு, முதுகுத் தண்டுவடம், கண், பற்களில் உபாதை வரலாம். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு, சகல நன்மையும் தரும்.


நட்சத்திர பலன்கள்

சித்திரை 3, 4 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

சுவாதி:

இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள். பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

Tags:    

Similar News