ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தூய்மை பணி மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மை பணி மேற்கொண்டார்.

Update: 2024-01-17 17:51 GMT

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆளுநர் ரவி தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில்  ராமேஸ்வரத்திலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் தரிசனத்தின்போது தூய்மை பணி செய்துள்ளார்.

ஆலயங்களை தூய்மை செய்வது என்பது அற்புதமான சேவை. அந்த பணியை சமீபத்தில் ராமர் ஆலயத்தில் தொடங்கினார் பிரதமர் மோடி. அவரைத் தொடர்ந்து பலரும் ஆலயத்தூய்மை பணியை செய்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி, பகவான் ஸ்ரீராமர் தொடர்புடைய ஆலயங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

முதலில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்ததோடு அந்த ஆலயத்தின் சிறப்புகளை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.

இங்கு தர்பையில் சயன கோலத்தில் ஓய்வெடுத்தபோதுதான் பிரபு ஸ்ரீ ராமர், இலங்கைக்கு பாலத்தை கட்ட முடிவெடுத்தார். இப்பகுதி முழுவதும் ஸ்ரீ ராமரின் புராண கதைகளால் நிரம்பியுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான பிரபு ஸ்ரீராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் உள்ளூர் மக்களிடையே முழு அளவிலான உற்சாகம் நிலவுகிறது.

ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இதனை ராஜ்பவன் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இங்குள்ள புனித சிவலிங்கத்தை பிரபு ஸ்ரீ ராமர் நிறுவி வழிபட்டார்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.எ.ன் ரவி இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு தனது மனைவி லட்சுமியுடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூலவர் ரங்கநாதர் மற்றும் தாயார் , சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தனது பட்டு வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு விளக்குமாற்றை கையில் எடுத்து தூய்மை பணி மேற்கொண்டார்.

Tags:    

Similar News