கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா
கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.;
கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா நடைபெற்றது.
புகழ் சோழ மன்னர் கரூரை ஆண்டபோது வாழ்ந்தவர் எறிபத்த நாயனார். சைவ சமயத்தினர் பெரிதும் போற்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் கையில் எப்போதும் மழுவுடன் இருப்பவர். ஒருமுறை அடியார் எடுத்து வந்த சிவ பூசைக்குரிய பூக்களை புகழ்ச்சோழரின் பட்டத்து யானை தட்டி விட அந்த யானையையும் பாதுகாவலர்களையும் எறிபத்த நாயனார் மழுவினால் வெட்டி கண்டித்தார். இதனை அறிந்த புகழ்ச்சோழர் தன்னையும் தண்டிக்க சோழரின் வாளினை பெற்றுத் தன்னையே வெட்டிக்கொள்ள முற்பட்ட அடியாரின் பெருமையை அறிந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தோன்றி இறந்தவர்களை உயிர்ப்பித்து வழங்கினார்.
எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா ஆண்டுதோறும் கரூர் அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீசுவரர் சாமி கோவில் முன்பு நடைபெறும். இந்த ஆண்டும் கரூர் மாநகராட்சி முன்புறம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. எறிபத்தநாயனார் பூக்குடலை நிகழ்வினை சிவனடியார்கள் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டினர். பசுபதீஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூக்குடலை திருவிழாவில் கரூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மல்லிகை, முல்லை, தும்பை பூ , அரளி தாமரை, வில்வம் ,மகிழம் , நந்திய வட்டம் , சங்கு, எருக்கன், விருச்சி, சிகப்பு அரளி, பவளமல்லி, செவ்வந்தி பூக்களைக் கொண்டு வந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஒவ்வொரு மலர் வழிபாடும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமணம் , வியாபாரம், சொத்து , குழந்தைப்பேறு, கல்வி, வேலை வாய்ப்பு, கடன், உடல் நலம் ,அறியவற்றில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் இதுபோல் வாழ்வில் ஏற்படும் இடையூறுகள் நீங்க நல்வாழ்வு பெற பக்தர்கள் வேண்டி தரிசனம் செய்தனர். கரூர் சிவனடியார்கள் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உணவு தங்கும் இடம் ஏற்பாடு செய்திருந்தனர்.