thiruvethikkudi temple-திருமணஞ்சேரிக்கு இணையான திருமண வரம் அருளும் திருவேதிக்குடி திருத்தலம் போலாமா..?

thiruvethikkudi temple உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? வாழ்க்கையிலே கல்யாணமே வேண்டாம் என்பவர்களுக்கு கல்யாணம் சீக்கிரம் நடந்து விடும்.அதுவே கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு தள்ளிப்போயிட்டே இருக்கும் இதுதாங்க வாழ்க்கை... மாத்தி யோசிங்க....படிங்க...

Update: 2023-04-29 08:18 GMT

thiruvethikkudi temple

திருமணஞ்சேரிக்கு இணையான திருமண வரம்அருளும் திருத்தலமாக திருவேதிக்குடி திருத்தலம் உள்ளது. வேதங்கள் வணங்கி வழிபட்ட கோயில், வேதம் கேட்ட வேதவிநாயகர் அமைந்துள்ள கோயில், பங்குனியில் சூரிய பூஜை நிகழும் கோயில், சப்த தலங்களுள் ஒன்று, திருவையாறு, ஏழுர் விழாவில் பங்கேற்கும் ஆலயம், சம்பந்தர், அப்பர் பாடிப்பரவிய திருக்கோயில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக திருவேதிக்குடி உள்ளது இதன் சிறப்பு ஆகும்.

திருமண வரம் அருளும் தலம் என்றதும், நம் அனைவரின் நினைவுக்கு வருவது திருமணஞ்சேரி கோயில்தான். ஆனால் இதற்கு இணையான ஒரு கோயில் தமிழகத்தில் உள்ளது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவேதிக்குடி திருத்தலம். இந்த இரு தலங்களுமே சம அளவி்ல் தேவாரப் பாடல்களைப் பெற்றவை என்பதுரும், இவ்விரு தலங்களையும் வழிபட்டவர்கள் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இனி திருவேதிக்குடி தலப்பெருமைகள் பற்றி பார்ப்போமா....வாங்க..

do you know,thiruvethikkudi temple?


thiruvethikkudi temple

பெயர்க்காரணம்

வேதங்கள் யாவும் இத்தலத்து இறைவனை வழிபட்டு வணங்கியதால், இத்தலத்திற்கு வேதிக்குடி எனப் பெயர் வந்தது. இதனால் இறைவன் வேதபுரீசுவரர் என அழைக்கப்படுகிறார். இதேபோல வேதி என்பது பிரம்மனைக்குறிக்கும் சொல்லாகும். இது பிரம்மன் வழிபட்ட தலமாகவும் விளங்குவதால் , வேதிக்குடி என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

வேதபுரீசுவரர்

கிழக்கு நோக்கிய வகையில் எளிய உருவில் இறைவன் கம்பீரமாக காட்சி தருகின்றார். வேதங்கள் வழிபட்டதால் இறைவனுக்கு வேதபுரீசுவரர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. வேதம் கேட்பதில் விருப்பமுள்ள விநாயகர், கருவறைக்கு வெளியே செவிசாய்த்துக் கேட்கும் கோலத்தில் வேத விநாயகராக காட்சி தருகிறார்.

பங்குனி மாதம் 13,14,15 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் அதிகாலை வேளையில் இறைவன் மீது ஒளிவீசி வழிபடுவது இந்தஆலயத்தின் மற்றொரு தனிச் சிறப்பாகும். இறைவன் வாழைமடுவில் தோன்றியதால் வாழைமடுநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மங்கையர்க்கரசி

ஆலயத்திற்கு வெளியே இடப்புறத்தில் அன்னைக்குத் தெற்கு நோக்கிய தனிச்சந்நிதி அமைந்துள்ளது. அதனருகே வசந்த மண்டபமும் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய அன்னை நின்ற கோலத்தில் அன்னையின் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.அன்னையே நம்மிடம் பேசுவது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த அன்னையே மங்கையர்க்கரசி என்று பெயருடன் அழைக்கப்படுகின்றார். இவரே திருமணத்தடை நீக்கும் அன்னையாவார்.

இத்தலத்து இறைவனையும் அன்னையையும் நேரில் வந்து முறையாக வழிபட்டு மனமுருக வேண்டிக்கொள்ள வேண்டும். திருஞானசம்பந்தரின் திருவேதிக்குடி பதிகத்தை முழு நம்பிக்கையோடு ஒரு மண்டலம் காலை, மாலை என இருவேளைகளிலும் தங்கள் இல்லங்களில் படிப்பவருக்குத் திருமணத்தடை நிச்சயம் நீங்கும். திருமணம் கைக்கூடும் என்பதற்கு இப்பகுதி வாழ் அடியார்கள் சாட்சியாகத் திகழ்கின்றனர். இதனைச் சம்பந்தர் தன் பதிகத்தில் உறுதியாக கூறுகின்றார்.

thiruvethikkudi temple


thiruvethikkudi temple

’உன்னி இருபோதும்அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித் துள்ளி ஒரு நால்வருடன் ஆல்நிழலில் இருந்து துணைவன் தன் இடம் ஆம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி, அருமங்கலம் மிக மின் இயலும் நுண்இடை நல்மங்கையர் இயற்றுபதி வேதி குடியே.

தடை நீங்கித்திருமணம் முடிந்ததும் தம்பதியராக இத்தலத்துக்கு மீண்டும் வந்து இறைவனுக்கு நன்றி கூறித் தங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்தினால் போதும்.

இத்தலத்தைத் ’’திண்ணன் வினைகளைத் தீர்க்கும் பிரான் திருவேதிகுடி நண்ணவரிய அமுதினை நாமடைந்தாடுதுமே’’ என்று திருநாவுக்கரசர் புகழ்ந்துரைக்கிறார்.

thiruvethikkudi temple


thiruvethikkudi temple

வேதவிநாயகர்

வேதம் கேட்பதில் விருப்பமுடையவரான விநாயகர், வேதிகுடி வேதபுரீசுவரரின் வேதத்தினைக் கேட்பதில் மிகுந்த விருப்பம் உள்ளவராக இருந்தார். இதனால் இறைவன் கூறும் வேதத்தினைக் கேட்க கருவறையின் வெளியே தன் செவிசாய்த்து வேதம் கேட்கும் கோலத்தில் இருப்பதுவேறெங்கும் காணமுடியாத அபூர்வ காட்சியாகும். இடது காலை உயர்த்தி, தலையை வலப்புறமாகச் சாய்த்து, இடது காதை உயர்த்திய நிலையில் அமைந்துள்ள விநாயகரின் அபூர்வக் கோலம் கண்டு ரசிக்கத்தக்கது.

இதன் காரணமாக இந்த விநாயகருக்கு வேத விநாயகர் என்றும், செவி சாய்த்த விநாயகர் என்றும் பெயர் வழங்கப்படுகிறது. இந்த விநாயகரை இறைவன் கருவறையின் வெளியே வலது புறத்தில் காணலாம்.

ஆலய அமைப்பு

இவ்வாலயம் மிகவும் எளிமையாக கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரத்துடன் எதிரே நந்தி மண்டபம். அதையடுத்து திருக்குளம், கோபுரத்தின் இடப்புறம் அம்மன் சந்நிதி, வசந்த மண்டபம் என அமைந்துள்ளது.

பழங்காலத்தில் இவ்வாலயம் தற்போது காணப்படும் முதற்பிரகாரம் இதில் இறைவன் சந்நிதியும் ,இரண்டாவது பிரகாரத்தில் அம்மன் சந்நிதி, மற்றும் நந்தி மண்டபம் அமைந்திருக்கக் கூடும். கால மாற்றத்தால் இரண்டாவது பிரகாரம் மறைந்து அம்மன் சந்நிதியும் நந்தி மண்டபமும் ஆலயத்திற்கு வெளியே அமைந்திருக்கலாம்.

thiruvethikkudi temple


thiruvethikkudi temple

ராஜகோபுரத்தினுள் நுழைந்ததும், மகாமண்டபம் உள்மண்டபம், அர்த்த மண்டபம், இதையடுத்து இறைவன் கருவறை காட்சி தருகின்றது. இறைவன் கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி , அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் திருவுருவங்கள் அமைந்துள்ளன. முருகன், மகாலட்சுமி, நடராஜர், சப்தலிங்கங்கள், 108 சிவலிங்கங்கள் தனித்தனியே அமைந்துள்ளன.

தலச்சிறப்பு

வேதிகுடியை வேதங்கள் வழிபட்டது போலவே, சூரியன், பிரம்மன், குபேரன், சைதன்ய முனிவர் எனப் பலரும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகவும், நவக்கிரக தோஷங்கள் நீக்கும் தலமாகவும், திகழ்கின்றது. திருவையாற்றைச் சுற்றிலும் அமைந்துள்ள சப்த தலங்களின் வரிசையில் திருவேதிகுடி நான்காவது தலமாகத் திகழ்கின்றது. அதேபோல திருவையாறில் சித்ரா பெளர்ணமி அன்று வரும் விசாக நட்சத்திர நாளில் சப்தஸ்தானத் திருவிழா எனப்படும் ஏழுர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் ஏழு ஊர்களிலிருந்து ஒன்று சேரும் இறைவன் திருவுருவங்களை ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். அதில் திருவேதிகுடி வேதபுரீசுவரரும் காட்சி தருவார்.

தலம் -தீர்த்தம்

இத்தலத்தின் தீர்த்தம் வேத தீர்த்தமாகும்.இது ஆலயத்தில் எதிரே அமைந்துள்ளது. தலமரம் வில்வமரமாகும்.

ஆலய அமைவிடம்

தஞ்சை மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் திருவேதிகுடி அமைந்துள்ளது. தஞ்சை-திருவையாறு வழித்தடத்தில் திருவையாறுக்கு முன்பாக கண்டியூர் என்ற தலம் வரும். கண்டியூரிலிருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் துாரத்தில் திருவேதிகுடி அமைந்துள்ளது. தற்போது நல்ல சாலை வசதியும் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மினி பஸ் வசதியும் உண்டு. கண்டியூரிலிருந்தும் ,திருவையாறிலிருந்தும் ஆட்டோ மூலமும் சென்று வரலாம்.

thiruvethikkudi temple


thiruvethikkudi temple

கல்வெட்டுகள்

இவ்வாலயத்தில் கி.பி. 1895 ம்ஆண்டின் தொல்லியல் ஆய்வறிக்கையின் மூலம் நான்கு கல்வெட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளின் மூலம் முதலாம் ஆதித்திய சோழன் (கி.பி. 890) இவ்வாலயத்திற்கு செய்த திருப்பணிகளைப் பற்றி அ றிய முடிகிறது. நிலக்கொடை விளக்கெரிக்க தானம் என இவ்வாலயத்திற்கு வழங்கப்பட்ட தானங்களை அறிய முடிகிறது. அத்துடன் இவ்வாலயம் 1100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.

தரிசன நேரம்

காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை திருக்கோயிலில் தரிசனம் செய்யலாம். திருமண தோஷம், கிரக தோஷம் உள்ள வர்களுக்கும் , வேதம் கற்க விரும்புவோருக்கும் ஏற்ற தலமாகத் திருவேதிக்குடி அமைந்துள்ளது.

நன்றி:பனையபுரம் அதியமான்.

Tags:    

Similar News