ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா- விழாவின் சிறப்பு பற்றி தெரியுமா?

திருநெல்வேலியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முளைப்பாரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆடி மாதம் வரும் இரண்டாம் அல்லது மூன்றாம் செவ்வாய்க்கிழமை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு முளைப்பாரி விழா தொடங்கப்படும்.;

Update: 2021-07-28 00:27 GMT

ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முளைப்பாரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவுக்காக ஆடி மாதம் வரும் இரண்டாம் அல்லது மூன்றாம் செவ்வாய்க்கிழமை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு முளைப்பாரி விழா தொடங்கப்படும். விழாவின் தொடக்க நாளன்று கோவிலில் முளைப்பாரி போட போகும் பெண்கள், விரதம் இருந்து காப்புக்கட்டி கொள்வார்கள்.

தொடக்க நாளன்று தண்ணீரில் ஊறவைத்த நவதானியங்களை மண் சட்டியில் தூய மண் பரப்பி அதில் போடுவார்கள். எத்தனை பெண்கள் முளைப்பாரி போடுகிறார்களா அதனை கணக்கில் கொண்டு முளைப்பாரி சட்டி எண்ணிக்கை கணக்கிட்டு வைக்கப்படும். இப்படி நவதானியங்களை விதைத்த மண் சட்டிகளை மற்றவர்களின் கண்களில் படாதவாறு பந்தல் அமைத்து அல்லது துணியால் மறைவு ஏற்படுத்தி பாதுகாத்து வருவார்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒருவர் மற்றும் உள்ளே சென்று அந்த முளைத்து வரும் முளைப்பாரிகளுக்கு தண்ணீர் தெளித்து வருவார்கள்.

பாளையங்கோட்டை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் முப்பிடாதி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி மாத முளைப்பாரி விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு முளைப்பாரி விழா தொடங்கிய நாள் முதல் முடியும் வரை உள்ள அனைத்து நாட்களும் மாலை வேளையில், பெண்கள் அனைவரும் ஒன்று கூடி முளைப்பாரி வளரும் பொருட்டு பாடல்களை பாடி குலவையிட்டு கும்மியடிப்பார்கள்.


பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்படும். இந்த விழாவின் எட்டாம் நாளான மறு வார செவ்வாய்க்கிழமை அன்று பகலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார, படையல் தீபாராதனை நடைபெறும். மாலையில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொலு வீற்றிருக்க, பெண்கள் அனைவரும் கூடி அம்மனை போற்றும் பாடல்கள் மற்றும் முளைப்பாரி பாடல்கள் பாடி கும்மி அடிப்பார்கள். அதே வேளையில் கோவில் வாசலில் மற்ற பெண்கள் பொங்கல் வைத்தும், சர்க்கரை பொங்கல் வைத்தும் வழிபாடு செய்வார்கள். பின்னர் இரவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

இந்த விழாவின் இறுதியாக ஒன்பதாம் நாளான புதன்கிழமை மாலை முளைப்பாரிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பின்னர் முளைப்பாரி போட்ட பெண்களால் கையில் ஏந்தி, நையாண்டி மேளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தாமிரபரணி ஆற்றில் முளைப்பாரி விடப்படும். இதுபோல இப்பகுதியில் உள்ள மற்ற அம்மன் கோவில்களான வண்ணாரப்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில், பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், உச்சினிமாகாளி அம்மன் கோவில், உலகம்மன் கோவில் ஆகியவற்றிலும் முளைப்பாரி விழா நடைபெறும்.

முளைப்பாரி விழாவின் சிறப்பு பற்றி தெரியமா?

அம்மன் கோவில்களில் முளைப்பாரி எடுத்தல் என்பது தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடு ஆகும். முளைப்பாரி ஆண்கள் நடமாட்டம் இல்லாத தீட்டு அற்ற சுத்தமான தனி இடத்தில் வளர்க்கப்பட வேண்டும். முளைப்பாரி வளர்க்கும் இடத்தில் அம்மை கண்ட வீட்டில் கடைபிடிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படும். எட்டு நாட்கள் சடங்காக வளர்க்கப்படும் இந்த முளைப்பாரி, ஒன்பதாம் நாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் விடப்படும். முளைப்பாரி நன்கு செழித்து வளர்ந்திருந்தால் அந்த வருட விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் பரவலாக காணப்படுகிறது.

முளைப்பாரி போடும் பெண்கள் விரதமாக இருக்க வேண்டும். குறிப்பாக தலையில் எண்ணெய் தேய்க்க கூடாது, சீப்பு கொண்டு தலை வார கூடாது, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும், அதிகமாக அலங்காரம் செய்து கொள்ளாமல் எளிமையாக இருக்க வேண்டும், குளிப்பதற்கும் குடிப்பதற்கும் வெந்நீரைப் பயன்படுத்தக்கூடாது, தொலைக்காட்சி, திரைப்படம், திரையிசை பாடல்கள் பார்க்கவோ, கேட்கவோ கூடாது, ஊர் விட்டு ஊர் போகக்கூடாது, தீட்டு பட்ட வீடுகளுக்கு செல்லக்கூடாது, அன்னியர்களை வீட்டில் தங்க வைக்கக்கூடாது போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டைய தொடங்கி இன்று வரை நடைபெற்று வரும் இந்த முளைப்பாரி விழா இயற்கையை நேசிக்கவும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

Tags:    

Similar News