கூடுதல் பக்தர்கள் வருகை: சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளார்கள்.
தற்போது முன்பதிவு செய்த பக்தர்கள் எண்ணிக்கை 90 ஆயிரம் என்று உள்ளது நிலக்கல் மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் 35 ஆயிரம் பேர் செய்கிறார்கள். மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் வரை தினமும் சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய காரணத்தினால் 10 முதல் 14 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரக் கூடிய பக்தர்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
தற்போது சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து பகல் ஒரு மணி வரையும் பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறந்து இரவு 11 மணி வரை மொத்தம் 17 மணி நேரம் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்க்கும் விதமாக சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகப்படுத்த கோவில் தந்திரி தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஆலோசனைக்கு பிறகு மாலை 4 மணி என்பதை 3 மணிக்கே நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்றிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் முதியவர்கள் உடல் ஊனமுற்றோருக்கென்று தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு மணி நேரம் கூடுதலாக நேரம் அதிகரித்துள்ளதால் சிரமங்களை ஓரளவுக்கு குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.