விநாயகர் தெரியும்..! தலையில்லாத விநாயகர் எங்கு இருக்கிறார் தெரியுமா?
தலையில்லாமல் மொட்டையாக அருள்பாலிக்கும் விநாயகர்...!!அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில்...!!;
தலையில்லாமல் மொட்டையாக அருள்பாலிக்கும் விநாயகர்...!!
அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில்...!!
அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில் மதுரை மாவட்டம் கீழமாசி வீதியில் மீனாட்சி அம்மன் கோயில் தேருக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. தமிழகத்தில் முக்கிய நகரங்களிலிருந்து மதுரைக்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.
விநாயகப் பெருமானுக்குத்தான் ஐந்துகரத்தான், ஆனைமுகத்தான், தொந்தி கணபதி என்று எத்தனை எத்தனைத் திருநாமங்கள். அந்த வரிசையில் இத்தலத்தில் உள்ள விநாயகர் மொட்டை விநாயகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். சிவன், கணபதியின் தலையை வீழ்த்தியதை உணர்த்தும் விதமாக விநாயகர், இங்கு தலையில்லாமல் மொட்டை கணபதியாக விளங்குகிறார்.தலையில்லாமல் விநாயகரைக் கொண்ட ஒரே கோயில் இக்கோயில் என்பது மிகவும் முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.
மதுரையின் மையப்பகுதியில், வியாபாரம் சிறந்து விளங்கும் இடத்தில், இந்தப் பிள்ளையார் அமைந்துள்ளதால் இவரை 'ஸ்ரீவியாபார விநாயகர்" என்றும் அழைக்கின்றனர்.வியாபாரிகள் தினமும் தங்களது தொழிலை தொடங்கும் முன்பு கடைச்சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர். இவ்வாறு செய்வதால் தமது தொழில் சிறப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி முதலான விசேஷ தினங்களில், வெள்ளிக் கவசத்தில் தலையின்றிக் காட்சி தரும் மொட்டை விநாயகரின் அழகே அழகு! இங்கு, ஆலயத்தில் ஸ்ரீபத்ரகாளியம்மன் பீடமும் உள்ளது.புதிதாக ஏதேனும் செயலை தொடங்கும்போது சீட்டு மூலம் உத்தரவு கேட்கும் முறையும் இங்குள்ளது.
இத்தலத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கும், வியாபாரத்தில் விருத்தி அடைவதற்கும் இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.