தூத்துக்குடியில் காலபைரவருக்கு நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்ற பக்தர்கள்
தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
காலபைரவர் பிறந்த தினமான மஹாதேவ காலபைரவாஷ்டமி அன்று அவரை மனம் உருக வணங்கினால் வேண்டும் வரங்கள் யாவும் கிடைத்திடும், வாழ்வில் கடன் தொல்லைகள் யாவும் நீங்கி செல்வங்கள் பெருகிடும், தொழில் மேம்படும் என்பது ஐதீகமாகும்.
அதன்படி மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவவேண்டியும், இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி கொழித்திடவேண்டியும், நோய், நொடிகள், கடன் தொல்லைகள் இல்லாமல் வளமாக நலமாக வாழவேண்டியும் தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் உள்ள ஸ்ரீமஹா காலபைரவருக்கு லட்சார்ச்சனையுடன் மஹா யாக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இதை முன்னிட்டு, காலை 9.20 மணிக்கு விநாயகர் வழிபாடும், 9.25 மணிக்கு நவக்கிரக ஹோமமும், லட்சுமி ஹோமமும், 9.45 மணிக்கு கன்னிகா பூஜையும், 9.50 மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஹோமமும் நடைபெற்றது.
தொடர்ந்து, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மஹா காலபைரவருக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா பிரத்தியங்கிராதேவி காலபைரவருக்கு லட்சார்ச்சனை இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர், மதியம் 2 மணிக்கு மஹா கால பைரவருக்கு பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பல வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.
மேலும் மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மீண்டு வரவும் உலக நன்மை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்ததுடன் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.