திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம்; வரும் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
Brahmotsavam, Tirupati Temple, flag hoisting on 18th- திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Brahmotsavam, Tirupati Temple, flag hoisting on 18th- திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நடப்பாண்டில் பிரம்மோற்சவ விழா, வரும் 18ம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், திருப்பதியில் உள்ள அன்னமைய்யா பவனில், நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு தர்மா ரெட்டி கூறியதாவது,
பிரம்மோற்சவத்தில் சாமானிய பக்தர்களுக்கும் முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிகமானோர் சுவாமியை தரிசிக்கவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. அதனால், பிரம்மோற்சவ நாட்களில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கான சிறப்பு தரிசனங்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, பி.சி. மற்றும் மீனவ பக்தர்கள் 1,000 பேருக்கு தினமும் இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.
செப்டம்பர் 22-ம் தேதி இரவு 7 மணிக்கு, கருட சேவை நடக்கிறது. அன்று திருப்பதியிலிருந்து திருமலைக்கு மோட்டார் பைக்குகள் வர தடை விதிக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக மாட வீதிகளில், ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூரை அமைக்கப்படும். பிரம்மோற்சவ வாகன சேவையின்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநில கலைஞர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மலைப்பாதையில் இப்போதைய நிபந்தனைகளே பிரம்மோற்சவத்திலும் பின்பற்றப்படும். ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 59,808 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 25,618 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரமானது.