ஆடி 2வது வெள்ளியன்று முத்துக்கண் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
ஆடி 2வது வெள்ளியன்று முத்துக்கண் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.;
திருச்சி வரகனேரி முத்துக்கண் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
பொதுவாக ஆடி மாதம் பக்தி மாதம் என போற்றப்படுகிறது. ஆடி மாதம் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறுவது இல்லை என்றாலும் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு என்றுமே பஞ்சம் வந்தது இல்லை.
அந்த வகையில் ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் குடும்ப தெய்வமான பூவாடைகாரியை பூஜித்து வழிபட்டால் குடும்பம் தழைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் கடந்த முதல் ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலுக்கு பெண்கள் குடும்பத்துடன் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். 2-வது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்நிலையில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்றும் அம்மன் கோவில்கள் பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் உள்ள முத்துக்கண் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உலக மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி முத்துக்கண் மாரியம்மனுக்கு 3.50 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ரூ.500, ரூ.200, ரூ .50, ரூ20 மற்றும் ரூ10 என ஆகிய நோட்டுகள் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து முத்துமாரியம்மன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு நடத்தப்பட்ட தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி சுற்று வட்டாரங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
அம்மனை வழிபட வந்த பக்தர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.