‘அயோத்தி ராமர் கோவிலால் மோடிக்கு கிடைத்த பாக்கியம்’- இளையராஜா புகழாரம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மோடிக்கு கிடைத்த பாக்கியம் என இளையராஜா புகழாரம் சூட்டி உள்ளார்.

Update: 2024-01-22 15:40 GMT

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா எம்.பி பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி உள்ளார்.

ராமர் பிறந்த அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா இன்று அயோத்தியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தொடங்கி பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ராமர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார். பிரதமர் மோடி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒவ்வொரு 10 மீட்டருக்கும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும், ஏற்கனவே பாஸ் பெற்றவர்களுக்கு மட்டுமே ராமர் கோயில் அருகே செல்ல அனுமதி தரப்பட்டு இருந்தது. மற்ற வாகனங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. அதேநேரம் நாடு முழுக்க உள்ள பக்தர்கள் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல்வேறு இடங்களிலும் கும்பாபிஷேக நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.

அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இளையராஜா பேசுகையில் இன்றைய நாளில் நடக்கும் நிகழ்வு சரித்திரத்தில் இடம்பெறக் கூடியது. இதுபோன்ற நிகழ்வு இப்போது தான் முதல்முறையாக நடக்கிறது. சரித்திரம் என்று சொல்லும் போது தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவில் இல்லை. உலகிலேயே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்று சொல்லலாம். வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சரித்திரத்தில் என்றும் அழியாத புகழைப் பெற்றுத் தரும். இந்த காரியத்தை முடித்த நமது பிரதமர் மோடிக்கு இந்த ஆழியாகப் புகழ் சென்று சேரும். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்.. யாரால் முடியும் இது..

அனைவராலும் இது செய்ய முடியுமா என்ன.. அவருக்கு எழுதி இருக்கு பாருங்க.. இந்தியாவுக்கு எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள். யார் யார் என்னென்ன செய்தார்கள். எது சரித்திரத்தில் நிற்கிறது என்று கணக்கு பாருங்கள்.. யார் செய்தது அதிகம் இருக்கிறது என்றும் கணக்கு பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே சொல்லும் போதே கண்களில் நீர் வருகிறது என்று எமோஷ்னல் ஆனார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த நாளில் உங்கள் முன்பு இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மனநிறைவைத் தருகிறது. அதேநேரம் அயோத்தியில் இருக்க வேண்டிய நான் இப்போது இங்கே இருப்பது எனக்கு வருத்தத்தை அளித்தாலும் உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது" என்று அவர் தெரிவித்தார். 

கும்பாபிஷேக நாளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், நாளை முதல் பக்தர்கள் ராமரைத் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும்,  பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். மேலும், காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்குச் சிறப்புப் பூஜைகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News