தேரோட்டம் முடிந்ததும் தீர்த்தவாரி கண்டருளினார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் முடிந்ததும் தீர்த்தவாரி கண்டருளினார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.;
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அருள் மிகு ரங்கநாதர் கோவில். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் விருப்பன் திருநாள் எனப்படும் சி்த்திரை தேர் திருவிழா மிகவும் முக்கியமான திருவிழா ஆகும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை தேரோட்டத்திற்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து உற்சவர் நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை தேர்த் திருவிழாவின் 9ம் நாளான இன்று (06.05.2024)காலை, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. பச்சைப்பட்டு உடுத்தி நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருள, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா, காவேரி ரங்கா, கஸ்தூரி ரங்கா, கோவிந்தா கோபாலா, என பக்தி கோஷங்கள் விண்ணதிர வடம் பிடித்து இழுத்து வந்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய தேரோட்டம், 9:25 மணிக்கு நிலையை அடைந்தது.
இதனை தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற தீர்த்த வாரி நிகழ்ச்சியில் பேரர் எனப்படும் சின்ன பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.