ஆடிப்பெருக்கு விழா: காவிரி தாய்க்கு சீர்வரிசை வழங்கினார் நம்பெருமாள்
திருச்சியில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி தாய்க்கு நம்பெருமாள் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
திருச்சியில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி தாய்க்கு நம்பெருமாள் மங்களப் பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார்.
ஆடி பதினெட்டாம் நாளான இன்று ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தின் காவிரி கரையோர மாவட்டங்களில் உள்ள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு விழாவில் புதுமண தம்பதியினர், சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு காவிரி தாய்க்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டினர். ஆடிப்பெருக்கு விழாவன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை 11.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டார். வழிநெடுக வழிநடை உபயங்கள் கண்டருளிய பின்னர் மதியம் ஒரு மணி அளவில் நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது காவிரி தாயை வழிபட வந்த திரளான பக்தர்களும் நம்பெருமாளை வழிபட்டனர். மாலை 4 மணிக்கு மேல் நம்பெருமாள் மலர் மாலைகள், பட்டு சேலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை காவிரி தாய்க்கு வழங்கினார்.
நம்பெருமாள் சார்பில் பட்டர்கள் கோவில் யானை ஆண்டாள் மீது அமர்ந்தபடி அதனை காவிரியாற்றில் வீசி மரியாதை செய்தார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா ரங்கா ரங்கா என கோஷங்களை எழுப்பினார்கள். அதன் பின்னர் நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி மீண்டும் மூலஸ்தானம் சென்றடைந்தார்.